கோவை : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் ( வயது 35 ) இவர் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவி ஆய்வாளக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் பொள்ளாச்சியை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார் . அதற்கு யோகேஸ்வரன் ரூ. 6 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த பெண் வழக்கறிஞர் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் பெண் வழக்கறிஞரிடம் ரசாயனமை தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்துஅனுப்பினார்கள். அந்த ரூபாய் நோட்டுகளை வருவாய் உதவி ஆய்வாளர் யோகேஸ்வரனிடம் அந்த பெண் வழக்கறிஞர் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், வருவாய் உதவியாளர் யோகேஸ்வரனை கையும் களவுமாக பிடித்தனர். இதைத் தொடர்ந்து அவரிடம் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு திவ்யா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஷீலா, எழிலரசி, மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து வருவாய் உதவி ஆய்வாளர் யோகேஸ்வரனை கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..