கோவை :பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் சுபே ஓட்டலில் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி 2 குண்டுகள் வெடித்தன . இதில் ஊழியர்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கினை பெங்களூரு காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கு என். ஐ .ஏ. வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரவிசாரணை நடத்திகுண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட சிவமொக்கா மாவட்டம் தீர்த்த ஹள்ளியை சேர்ந்த முசபீர் உசேன் சாஜிப் ,அப்துல் மதீன் தாகா ஆக 2 பேரையும் கைது செய்தனர் .தொடர்ந்து என். ஐ. ஏ. அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரண நடத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ. ஏ அதிகாரிகள் நேற்று கோவையில் உள்ள 2 டாக்டர்கள் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். கோவை சாய்பாபா காலனி ,பெரிய கருப்பண்ண கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஜாபர் இக்பால் (வயது 39) தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை 8 மணிக்கு இவரது வீட்டிற்கு என். ஐ.. ஏ. அதிகாரிகள் காரில் வந்தனர். அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் வீட்டில் நுழைவாயில் கதவுகளை யாரும் உள்ளே நுழையாதவாறு அடைத்தனர். தொடர்ந்து ஜாபர் இக்பாலின் வீடு முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. வீட்டில் இருந்த டாக்டர் ஜாபர் இக்பாலிடமும் விசாரித்தனர். சோதனையின் போது வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை அதிகாரிகள் வாங்கிக் கொண்டனர்.இதே போல கோவையில் உள்ள அவரது உறவினரான டாக்டர் நயிம்சித்திக் ( வயது 38) என்பவரின் வீட்டிலும் என். ஐ.. ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது 2பேரின் செல் போன்களையும் அதிகாரிகள் வாங்கிக் கொண்டனர். அதில் உள்ள தரவுகளை ஆராய்ந்துசோதனை செய்துவிட்டு திரும்ப ஒப்படைப்பதாக கூறிவிட்டு சென்றனர். மேலும் அவர்கள் 2பேரையும் வருகிற 23ஆம் தேதி பெங்களூருவில் உள்ள என் ஐ. ஏ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறிவிட்டு சென்றனர்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- என். ஐ. ஏ .அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்ட ஜாபர் இக்பால், நயிம் சித்திக் இருவரும் உறவினர்கள் . இவர்கள் மருத்துவப் படிப்பு படித்துள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட லஸ்கர் இ தொய்பா அமைப்புடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு 5 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளனர். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு இருவரும் டாக்டர் பணியை தொடர்ந்துள்ளனர். பெங்களூரு ராமேஸ்வரம் சுபே ஓட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான ஒருவருக்கு வேறு ஒரு வழக்கில் தொடர்பு இருந்தது. அந்த வழக்கில் ஜாபர் இக்பால் , நயீம் சித்திக் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. எனவே அதன் அடிப்படையில் ராமேஸ்வரம் சுபே ஓட்டல் குண்டுவெடிப்பு விவகாரத்தில் இவர்கள் இருவருக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? கைதானவர்களுடன் அறிமுகம் உள்ளதா? என்று என். ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள் .