பெங்களூரு: முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது புகார் அளித்த சிறுமியின் தாய் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா. பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் மீது 17 வயது சிறுமியின் தாயார் சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்வி உதவித்தொகை தொடர்பாக சந்திக்க சென்ற தனது மகளை தனி அறைக்கு அழைத்து சென்று எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தாயார் பிப்.2ம் தேதி புகார் அளித்தார். இந்த வழக்கை சிஐடி விசாரணைக்கு கர்நாடக அரசு மாற்றியது. இந்நிலையில் தற்போது சிறுமியின் தாயார் மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண், சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக தெரியவருகிறது. இவர் எடியூரப்பாவை சந்திக்க நாளை நேரம் கேட்டிருந்ததாகவும், தற்போது அவர் மரணமடைந்துள்ளதால் இதில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் வழக்கறிஞர் பாலன் தெரிவித்துள்ளார். பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.