கோவை பீளமேட்டில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனை வளாகத்தில் கடந்த 26ஆம் தேதி பெண்கள் கழிப்பிடம் அருகே 40 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாகவும் ,அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதாகவும், இதையடுத்து சிகிச்சை அளித்தும் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவர் யார்? என்று அடையாளம் தெரியாமல் இருந்தது.விசாரணையில் அவர் காந்திமா நகரைச் சேர்ந்த ராஜன் என்ற மணி (வயது 38) என்பது தெரிய வந்தது. இவரது சொந்த ஊர் கரூர் .இவர் கோவை காந்தி மாநகரில் குடும்பத்துடன் தங்கி இருந்து பிளம்பராக வேலை பார்த்து வந்தார். இதுகுறித்து மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன் பீளமேடு போலீசில் கொடுத்த புகாரில் மாரடைப்பால் இறந்ததாக கூறியுள்ளார். இதை வைத்து போலீசார் முதலில் தற்கொலை,மர்ம சாவு வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் பிளம்பர் ராஜன் மருத்துவமனையில் சந்தேகத்தின் பேரில் திருட்டு தொடர்பாக காவலாளிகளால் அடித்து கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து உதவி கமிஷனர் பார்த்திபன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சப் இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மருத்துவமனையில் இரும்பு பொருட்கள் அடிக்கடி திருட்டு போனதாகவும், அதை கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்த போது ஒருவரின் உருவம் தெரிந்தது பதிவாகி இருந்தது. அதை காப்பி எடுத்து மருத்துவமனையில் உள்ள அனைத்து காவலாளிகளுக்கும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் 26.ஆம் தேதி அந்த உருவம் கொண்டவர் அங்குள்ள பெண்கள் டாய்லெட் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த போது காவலாளிகள் அவரை பிடித்து அறைக்குள் கூட்டி சென்று இரும்பு பைப்பால் சரமாரியாக அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இது தொடர்பாக சசிகுமார் ( 37) துணைத் தலைவர் நாராயணன் (47) மணிகண்டன் (36) சரவணகுமார் ( 34 ) சுரேஷ்குமார் (51) லோகநாதன் ( 46 ) குமரவடிவேல் (47) திருப்பதி நாதன் ( 61 ) சுரேஷ் ( 50 ) சாஸ்திரி ( 56 ) சார்லஸ் ( 45 ) சதீஷ்குமார் ( 42 ) சரவணகுமார் ( 34 ) ரமேஷ் ( 36 ) நாகேந்திர ராஜன் ( 37 ) ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.