கோவை : கேரள மாநிலம் வய நாடு, மண்டாடு பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 44 ) கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார் . இவரிடம் குனியமுத்தூரை சேர்ந்த பெரோஸ்கான் (வயது 43) என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு இரிடியம் வாங்கி தருவதாக ரூ 3 கோடியே 92 லட்சம் வாங்கினாராம். ஆனால் அவர் சொன்னபடி இரிடியம் வாங்கி கொடுக்கவில்லை. பலமுறை கேட்டபோதும் இரிடியம் வாங்கி தராமல் நாட்களை கடத்தியுள்ளார் . இது குறித்து குனியமுத்தூர் போலீசில் சிராஜுதீன் புகார் செய்துள்ளார் . அதில் அவர் கூறியிருப்பதாவது:- இரிடியம் வாங்கி தருவதாக கூறி என்னிடம் பெரோஸ்கான் 3.92 கோடி வாங்கினார். ஆனால் இதுவரை அவர் எனக்கு இரிடியம் வாங்கித் தரவில்லை .இது தொடர்பாக நான் பலமுறை அவரிடம் செல்போனிலும், நேரில் சென்றும் கேட்டேன். ஆனால் இதுவரை இரிடியம் தரவில்லை. நான் கொடுத்த பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. பணத்தை திரும்ப கேட்டால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் . என்னிடம் இரிடியம் தருவதாக கூறி ரூ 3.92 கோடி மோசடி செய்த பெரோஸ் கான் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. அதன் பேரில் போலீசார் பெரோஸ் கான் மற்றும் அவரது நண்பர்கள் அஷ்ரப் கான் பெரோஸ்கான் மனைவி சலியா பீவி, அஜய், ஷாஜி, ஸ்ரீதர் ஆகியோர் மீது மோசடி, கூட்டு சதி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..