குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா சுமார் 7 லட்சம் வாக்கு வித்தியாச்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அமித் ஷாவுக்கு 10,10,972 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சோனல் ரமன்பாய் படேல் 2,66,256 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி காந்தி நகர் தொகுதியில் 1991, 1998, 1999, 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அமித் ஷா சுமார் 5.57 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் இப்போது 2-வது முறையாக இந்த தொகுதியில் போட்டியிட்ட அவர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 1996-ம் ஆண்டு தேர்தலில் காந்திநகர் மற்றும் லக்னோவில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். எனினும், காந்திநகர் தொகுதி எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.