திருச்சூர்: ‘ஒட்டுமொத்த கேரளத்துக்கும், அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் விஷயங்களை கவனிக்கும் எம்.பி.யாக செயல்படுவேன்’ என்று நடிகரும், திருச்சூர் எம்.பி.,யுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தமிழில் தீனா, ஐ, தமிழரசன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கேரளாவில் பாஜக-வை காலூன்ற வைத்துள்ளார்.
அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம் என பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே, இன்று டெல்லி செல்லவுள்ள அவர் அதற்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், ‘கேரளத்திலும், தமிழநாட்டிலும் உள்ள ஒரே ஒரு பாஜக எம்.பி. நீங்கள் தான்’ என்று கேள்வியை முன்வைத்தார்.
அதற்கு பதில் தரும் வகையில் பேசிய சுரேஷ் கோபி, ‘என் சிந்தனையில் இதற்கு முன் இது இருந்தது இல்லை. ஆனால், நான் பேசிய இடங்களில் எல்லாம், 90 சதவீதம் எனது பேச்சில் திருச்சூர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் திருச்சூருக்காக மட்டும் செயல்பட மாட்டேன்.
ஒட்டுமொத்த கேரளத்துக்கும், கேரளத்தின் எல்லையான தமிழ்நாட்டுக்கு வேண்டியும் செயல்படுவேன், தமிழ்நாட்டின் விஷயங்களை கவனிக்கும் எம்.பி.,யாக செயல்படுவேன் என்று அன்றே கூறினேன். எனது பேச்சுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். அதனால், இப்போதும் கூறுகிறேன் ஒட்டுமொத்த கேரளத்துக்கும், கேரளத்தின் எல்லையான தமிழ்நாட்டின் விஷயங்களை கவனிக்கும் எம்.பி.யாக செயல்படுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.