திருச்சி புதிய விமான முனையம் பஞ்சப்பூர் பஸ் நிலையம் – அமைச்சர் நேரு ஆய்வு..!

திருச்சி நகரில் நிலவும் கடும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீா்வு காணும் வகையில் மாநகராட்சி சாா்பில் பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் பிரம்மாண்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ரூ. 350 கோடியில் மிக பிரம்மாண்டமான முறையில் அதிக பொருட்செலவில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன . இதுபோல் திருச்சி விமான நிலையத்தில் பிரதமா் மோடி கடந்த ஜனவரி 2 இல் திறக்கப்பட்ட புதிய முனையத்தின் பல்வேறு பணிகள் நிறைவடையாத காரணத்தால் அந்த முனையம் செயல்பாட்டுக்கு வரவில்லை தற்போது எஞ்சிய பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிய விமான முனையம் பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ஆகியவற்றை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னர் செய்தியாளா்களிடம் கூறிய போது வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறக்கும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. அதுபோல் திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை ஆய்வு செய்தோம் இந்த முனையம் திருச்சி விமான நிலையத்திலிருந்து உள்ளே செல்ல 1.5 கிலோமீட்டா் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் நடந்து செல்ல சிரமமாக இருப்பதால் திருச்சி விமான நிலையத்திலிருந்து புதிய முனையத்திற்கு பயணிகள் தடையின்றி செல்ல வாகன வசதிகள் செய்துதர வேண்டி போக்குவரத்து துறைக்கு கேட்டுள்ளார்கள். பயணிகள் பஸ்ஸில் ஏறி புதிய முனையத்திற்கு செல்ல பேருந்து வசதி செய்து தரப்படும் மேலும் அங்கு முக்கிய பிரமுகா்களுக்கென தனி வழித்தடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) காலை முதல் புதிய முனையம் செயல்பாட்டுக்கு வரும் என்றாா் அமைச்சா் . ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், திருச்சி விமான நிலைய இயக்குநா் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் பலா் உடனிருந்தனா். திருச்சி புதிய விமான நிலையம் திறக்கப்பட்டு இருப்பதால் ஏராளமான பயணிகள் இங்கிருந்து வெளிநாட்டுக்கு விமான பயணம் செல்லலாம் என்றனர்..