திருப்பூர் மாவட்டம், பல்லடம், அண்ணா நகரை சேர்ந்தவர் பைஜ் அகமது. இவரது வீட்டில் இரண்டாவது மாடியில் கட்டிடம் கட்டி உள்ளார் . இதற்காக மின் இணைப்பு கேட்டு பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின் பொறியாளர் சுரேஷ் பாபுவை சந்தித்து விண்ணப்பம் கொடுத்தார். அப்போது அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மின் இணைப்பு உடனடியாக தருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து பைஜ் அகமது திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார் . லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மின்வாரிய அதிகாரியிடம் கொடுக்குமாறு கூறினர். இதையடுத்து பல்லடம் மின்வாரிய அலுவலகம் சென்ற பைஜ் அகமது அங்கு பணியில் இருந்த உதவி மின்பொறியாளர் சுரேஷ் பாபுவிடம் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுரேஷ் பாபுவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.இதையடுத்து இவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது .இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..