தமிழகத்தில் மீண்டும் மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்த வரைவு திட்ட அறிக்கையின் படி, தமிழகம் முழுவதும் மினி பஸ்களை இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழித்தடம் வழங்கப்படாது என்றும், அதே நேரத்தில், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோளிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் எந்தெந்த வழித்தடத்தில் மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி வழங்குவது மற்றும் எவ்வளவு பேருந்துகளுக்கு அனுமதி வழங்குவது என்பதை ஆர்.டி.ஓ-க்கள் முடிவு செய்வார்கள். அதிகபட்சமாக 25 கி.மீ தூரம் வரை மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படும். இதில், 18 கி.மீ சேவை இல்லாத வழித்தடத்திலும், 8 கி.மீ சேவை உள்ள வழித்தடத்திலும் அனுமதி வழங்கப்பட உள்ளது.
ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இல்லாமல் ஒரு மினி பேருந்தில் அதிகபட்சமாக 25 பேர் பயணம் செய்யும் வகையில் இருக்கை வசதி அமைந்திருக்கும். அனைத்து மினி பஸ்களிலும் ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வரைவு அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வரும் ஜூலை 14ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஜூலை 22ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெற உள்ளது.
2011 ஆம் ஆண்டு தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் 2018 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் வரைவுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.