சட்டசபைக்கு கறுப்பு சட்டையில் வந்த அதிமுக எம்எல்ஏக்கள்.!!

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தற்போதும் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) சட்டப்பேரவையில் நீர்வளத்துறை, வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. மேலும், இன்றைய கூட்டத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அதிமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர். மேலும், சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்புவது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் தனது அறையில் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.முன்னதாக நேற்று கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, “கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்தக் கோரி போலீஸில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக சபாநாயகரிடம் மனுவும் அளித்துள்ளனர். ஆனாலும் நடவடிக்கை இல்லை. நிர்வாகத் திறமையற்ற முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும். அவருக்கு மக்கள் நலன் குறித்து அக்கறை இல்லை. கள்ளச் சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த ஒரு தம்பதியின் 3 குழந்தைகளின் நிலை கவலைக்குரியதாக மாறியுள்ளது. அவர்களது கல்விச் செலவை அதிமுக ஏற்பதுடன், அவர்கள் குடும்பத்துக்கு 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.