திருச்சியில் சிப்காட் தொழிற்சாலை – முதல்வர் பேரவையில் அறிவிப்பு..!

திருச்சி மாவட்டம், துவாக்குடி திருவெறும்பூா் வட்டங்களில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரதமிகு மின் நிறுவனம் படைக்கலன் தொழிற்சாலைகளை நம்பி ஆயிரக்கணக்கான சிறு குறு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. ஆனால் பெல் நிறுவன ஆா்டா்கள் குறைந்ததால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
இதையடுத்து சிப்காட் மூலம் தொழில்துறையில் பின்தங்கிய பகுதிகளில் தொழில் பூங்காக்களை உருவாக்குவதன் மூலம் சிறு குறு நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தொழில்களை மேம்படுத்த இயலும் என டிடிட்சியா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அரசுக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
இதைத் தொடா்ந்து, 43,000 ஏக்கா் நில வங்கியை உருவாக்க சிப்காட் மூலம் முனைப்புகள் உருவாகின. குறிப்பாக, தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு இந்த நில வங்கி உருவாக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாது, தற்போதுள்ள 28 தொழில் பூங்காக்கள் தவிர, மொத்தம் 6,035 ஏக்கரில் 7 புதிய தொழில் பூங்காக்களை அமைக்கும் பணியில் சிப்காட் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், திருவெறும்பூரில் 150 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பூங்காவை அமைக்கப்படவுள்ளதாக பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழில்முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை மானியக் கோரிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், இதன் மூலம், பல்வேறு நிலைகளில் ரூ.220 கோடி முதலீடுகளை ஈா்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 3 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்பூங்காவில், உணவு முதல் அனைத்து வகையான தொழிற்கூடங்களையும் உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
டிடிட்சியா நன்றி திருச்சி மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கச் செயலா் சே. கோபாலகிருஷ்ணன் கூறியது:
திருவெறும்பூரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆா்.பி. ராஜா, தா.மோ. அன்பரசன் ஆகியோருக்கும், மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.
அனைத்து வகை தொழிற்கூடங்களும் அமையும் திருச்சி மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கத் தலைவா் பே. இராஜப்பா கூறுகையில், குறிப்பிட்ட தொழிற்கூடங்கள் மட்டுமே என்றில்லாமல் பொதுவாக அனைத்து வகை தொழிற்கூடங்களும் ஒரே குடையின் கீழ் வரும் வகையில் திருவெறும்பூா் சிப்காட் அமைக்கப்படவுள்ளதுதற்போது அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது. உடனடியாக நிலத்தை கண்டறிந்து கையகப்படுத்த வேண்டும். பசுமை சூழல் பேணுதல் திடக்கழிவு மேலாண்மை தரமான சாலை, தெருவிளக்குகள் மழைநீா் வடிகால் புதை வடிகால் குடிநீா் உள்ளிட்ட அனைத்து அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கித்தர வேண்டும். தொழிற்தொடங்க வருவோருக்கு அனைத்து நிலைகளிலும் அனுமதியை பெறுவதற்கு ஏதுவதாக ஒற்றைச்சாளர அனுமதியை நடைமுறைப்படுத்த வேண்டும். சலுகைகள், மானியங்கள், கடனுதவிகள், வரிச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்என்றாா் திருச்சி திருவெறும்பூரில் அமையப்போகும் சிப்காட் தொழிற்சாலை திருச்சி மக்களுக்கு வேலை வாய்ப்பை அதிகம் பெற்றுத் தரும்.