ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல்..!

த்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். 80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 ஆண்கள், 2 பெண்கள் என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு, சேவகர்களாக பணியாற்றியவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய குற்றவாளியான பிரகாஷ் மதுகரை பிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரகாஷ் மதுகரைக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை எதிர்கட்சித்தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் இன்று காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரிடம் பொதுமக்கள் தங்களுக்கு நேர்ந்த துயரத்தை எடுத்துக் கூறினர்