திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு..!

திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில், முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை 67-ல் இருந்து 17 ஆக குறைந்தது.

இளநிலை மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 23.33 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்தத் தேர்வு, வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது, ஹரியானாவில் ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 பேர் உள்பட 67 பேர் முதலிடம் பிடித்தது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது.

பிகார், ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருந்த மையங்களில் வினாத்தாள் கசிவு, உத்தர பிரதேச தோ்வு மையத்தில் தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக சமூக வலைதளத்தில் வினாத்தாள் பதிவேற்றம், கருணை மதிப்பெண் என்ற பெயரில் குறிப்பிட்ட சில தேர்வர்களுக்கு தேர்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) கூடுதல் மதிப்பெண் வழங்கியது எனப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்த முறைகேடு புகார்கள் தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தேர்வில் 1,500-க்கும் அதிகமானோருக்கு வழங்கிய கருணை மதிப்பெண்ணை ரத்து செய்த என்டிஏ, அவர்களுக்கு மறு தோ்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டது. இதில், ஹரியானா மையத்தில் முன்னர் 6 போ் முதலிடம் பெற்றிருந்த நிலையில், மறு தோ்வுக்குப் பிறகு அந்த மையத்தில் ஒருவர்கூட முதலிடம் பெறவில்லை.

இதனால், நீட் தேர்வில் 720-க்கு 720 பெற்றவர்களின் எண்ணிக்கை 61-ஆகக் குறைந்தது. இதனிடையே, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும், நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ‘வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பரவலாக நடைபெற்றுள்ளதற்கான எந்தவித ஆதாரமும் இதுவரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, நீட் தோ்வை ரத்து செய்ய முடியாது’ என்று தீர்ப்பளித்தது. மேலும், இறுதி முடிவுகளை வெளியிடுமாறும் என்டிஏவுக்கு அறிவுறுத்தியது.

திருத்தப்பட்ட இறுதி முடிவுகளை என்டிஏ நேற்று வெளியிட்டது. இந்த திருத்தப்பட்ட இறுதி முடிவுகளின்படி, நிகழாண்டு நீட் தோ்வில் 720-க்கு 720 பெற்ற மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 17-ஆகக் குறைந்தது. மேலும், இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கை தகுதிக்கான கட்-ஆஃப், தகுதிபெற்ற மாணவா் எண்ணிக்கை ஆகியவையும் குறைந்துள்ளது.