மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி – 2 பெண்கள் கைது.!

கோவை : சென்னை மேற்கு அண்ணா சாலை பகுதியில் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் நடத்தி வந்தவர் இந்திரா காந்தி (வயது 55 ) இவரிடம் உதவியாளராக பணியாற்றியவர் கவிப்பிரியா (வயது 28) இவர்கள் மத்திய அரசு பணியில் வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி கோவையைச் சேர்ந்த 18 பேரிடம் மொத்தம் ரூ.2 கோடி வரை வாங்கி உள்ளனர்.

 

ஆனால் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இந்திரா காந்தி ஏமாற்றி வந்தார். இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர் . அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னை சென்று இந்திரா காந்தி மற்றும் அவரது உதவியாளர் கவிப்பிரியா 2 பேரையும் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான கவிப் பிரியா சென்னை லஞ்ச ஒழிப்பு துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணி செய்து வருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்தது .இந்த மோசடி தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..