கோவை ஒப்பணக்கார வீதியை சேர்ந்தவர் சங்கரசுப்பிரமணியம். தங்க நகை மொத்த வியாபாரி.. இவர் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:- மும்பை செம்பூரை சேர்ந்த தங்க கட்டி வியாபாரம் செய்யும் தீரஜ் குமார் ( வயது 55) அவரது மகன் குணால் தீரஜ் குமார் ( வயது 30) ஆகியோர் எங்கள் நிறுவனத்துக்கு 8 கிலோ தங்க கட்டி தருவதாக கூறி ரூ 4 கோடியே 80 லட்சம் வாங்கினார்கள். ஆனால் 4 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை மட்டுமே கொடுத்தனர். மேலும் 4 கிலோ தங்ககட்டிகளை கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர். இதன் மதிப்பு ரூ 2 கோடியே 40 லட்சம் இருக்கும். இவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறியிருந்தனர். தந்தை – மகன் ஆகிய 2 பேரையும் பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ராஜன் மும்பைக்கு தனிப்படை அனுப்பினார் . மும்பை சென்ற தனிப்படையினர் தீரஜ் குமாரையும், அவரது மகன் குணால் தீரஜ் குமாரையும் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..