சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ரோஹன் போபண்ணா ஓய்வு..!

ந்தியாவின் இரட்டையர் பிரிவு டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த ரோஹன் போபண்ணா, ஒலிம்பிக் பதக்கத்துடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற எண்ணியிருந்தார். இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் பிரிவில், ஸ்ரீராம் பாலாஜியுடன் இணைந்து களம் கண்ட போபண்ணா, முதல் சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியேறினார்.

இந்த நிலையில் சர்வதேச டென்னிஸ் போடிகளில் இருந்து தான் ஓய்வு பெறும் முடிவை அறிவித்திருக்கிறார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல நினைத்த அவர் ஏமாற்றத்துடன் விடைபெற்றுள்ளார். 2016 ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸாவுடன் களம் கண்ட போபண்ணா, 4-ஆம் இடம் பிடித்து பதக்கத்தை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மூலம் ஆடவர் இரட்டையர் பிரிவில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற போபண்ணா, அதன் பிறகு ஏடிபி தரவரிசையில் ஆடவர் இரட்டையரில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த வயதான வீரராகவும் வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது. தனது டென்னிஸ் வாழ்க்கையில் அவர் 26 பட்டங்கள் வென்றிருக்கிறார்.

தோல்வியடைந்த நிலையில் ஓய்வு முடிவு குறித்து போணண்ணா தெரிவித்ததாவது..

‘பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக இதுவே எனது கடைசி ஆட்டமாகும். தற்போது எந்தக் கட்டத்தில் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்பதை நான் நன்கு அறிவேன். டென்னிஸில் நான் தற்போது இருக்கும் நிலையே எதிர்பார்க்காத வளர்ச்சி தான். இந்தியாவுக்காக 20 ஆண்டுகள் விளையாடுவேன் என்று நான் நினைக்கவில்லை. அதற்காக பெருமைப்படுகிறேன்.

2010-இல் பிரேஸிலில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை போட்டியில் ரிகார்டோ மெலோவை வீழ்த்தியதே இந்தியாவுக்காக விளையாடியதில் எனது மிகச் சிறந்த தருணம். அதேபோல் சென்னை, பெங்களூரில் விளையாடிய ஆட்டங்களும் மறக்க முடியாதவை’ என போபண்ணா தெரிவித்தார்.