அமெரிக்கா தேர்தல்… ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்.!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட இருந்த ஜோ பைடன் கடைசி நேரத்தில் விலகினார். இதற்கிடையே கமலா ஹாரிஸ் அதிபர் ரேஸில் களமிறங்கிய நிலையில், அவர் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படத் தேவையான வாக்குகளை உறுதி செய்துள்ளார். அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. ஜனநாயக கட்சி சார்பில் முதலில் பைடன் போட்டியிடுவதாக இருந்தது. இருப்பினும், அவரது உடல்நிலை காரணமாக அவர் போட்டியிடக்கூடாது என்று பலரும் அழுத்தம் கொடுத்தனர். இதன் காரணமாக அவர் கடந்த மாதம் அதிபர் ரேஸில் இருந்து விலகினார். அவர் தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக முன்மொழிந்தார். இதற்கிடையே ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படத் தேவையான அளவு வாக்குகளை அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறுதி செய்துள்ளார். அமெரிக்காவைப் பொறுத்தவரை ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர்கள் உட்கட்சி தேர்தல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி நடந்த உட்கட்சி தேர்தலில் பைடன் போதுமான வாக்குகளைப் பெற்றிருந்தார். இதற்கிடையே அவர் அதிபர் ரேஸில் இருந்து விலகிய நிலையில், புதிய அதிபர் வேட்பாளரைத் தேர்வு செய்ய உட்கட்சி தேர்தல் நடைபெறுகிறது. சுமார் 4,000 ஜனநாயக கட்சி பிரதிநிதிகளின் வாக்களிக்கும் இந்த உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. பொதுவாக இந்தத் தேர்தல் பல நாட்கள் நடக்கும். ஆனால், அதிபர் தேர்தலுக்கு சில காலமே இருப்பதால் ஐந்து நாட்களில் இது நடத்தப்பட்டது. இதில் கமலா ஹாரிஸ் மட்டுமே வேட்பாளராக இருந்த நிலையில், அவர் அதிபர் வேட்பாளராகத் தேவையான வாக்குகளைப் பெற்றார்.. வரும் ஆகஸ்ட் 19 முதல் 22 வரை சிகாகோவில் ஜனநாயக கட்சி மாநாடு நடைபெறும் நிலையில், அதில் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார். அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக இருப்பதில் தான் பெருமை கொள்வதாக 59 வயதான கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ஜோ பைடன் அதிபர் ரேஸில் இருந்து விலகிய இரண்டே வாரங்களில் ஜனநாயக கட்சியின் முழு ஆதரவும் கமலா ஹாரிஸுக்கு கிடைத்துள்ளது. அதிபர் ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்த பைடன், தனக்குப் பதிலாக கமலா ஹாரிஸை முன்மொழிந்தார். அவருக்கு எதிராக வேறு எந்தவொரு ஜனநாயக கட்சித் தலைவரும் போட்டியிடவில்லை. ஏற்கனவே அமெரிக்கத் துணை அதிபர் பதவியில் இருக்கும் முதல் பெண் என்ற சாதனையைக் கமலா ஹாரிஸ் படைத்திருந்தார். இதற்கிடையே அதிபர் வேட்பாளராகக் களமிறங்கும் முதல் கறுப்பின பெண் என்ற வரலாற்றைக் கமலா ஹாரிஸ் படைத்துள்ளார். மேலும், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும். கமலா ஹாரிஸ் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவது உறுதியாகி இருக்கும் நிலையில், அவர் யாரைத் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப் போகிறார் என்பது கேள்வியாக இருக்கிறது. இந்த மாதம் ஆகஸ்ட் 19ம் தேதி ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு நடைபெறும் நிலையில், அப்போது ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது..