சென்னை: வழக்கமாக மத்தியில் உள்ள மோடி அரசைக் கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் திடீரென பாஜகவைப் பாராட்டியுள்ளார்.
பல்வேறு துறைகளில் தொழில்நுட்பத்தைப் புகுத்தியது உள்ளிட்ட பல பல விஷயங்களை பாஜக சரியாகச் செய்துள்ளது என்று கார்த்தி சிதம்பரம் பாராட்டி இருக்கிறார்.
சிவகங்கை தொகுதி எம்பியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் நமது ஒன் இந்தியா தளத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். வழக்கமாக பாஜகவைக் கடுமையாக விமர்சித்தே வரும் கார்த்தி சிதம்பரம், இதில் மோடி அரசைப் பாராட்டியுள்ளார்.
எதிர்க்கட்சி வரிசையில் முக்கிய தலைவராக இருக்கும் கார்த்தி சிதம்பரம் பாஜக அரசைப் பாராட்டியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தற்போதைய பாஜக அரசு தொழில்நுட்பத் துறையில் கொண்டு வந்துள்ள மாற்றங்களை அவர் பாராட்டியுள்ளார்.
கடந்த 2014 முதலே பாஜக பல விஷயங்களைச் சரியாகச் செய்துள்ளதாகப் பாராட்டியுள்ள கார்த்தி சிதம்பரம், அதேநேரம் பல விஷயங்களில் தவறான அணுகுமுறையைக் கையாண்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்தியா என்றால் என்ன என்பதில் பாஜக நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்தி இந்து இந்தியா என்பதே அவர்கள் நிலைப்பாடு.. இதை ஏற்க முடியாது.. ஆனால் அவர்கள் பல விஷயங்களைச் சரியாகச் செய்துள்ளனர் என்பதைச் சொல்லலாம்.. குறிப்பாகத் தொழில்நுட்ப துறையில் புதுமைகளைப் புகுத்த பிரதமரின் உந்துதலை நாம் குறிப்பிடாமல் தவிர்க்கவே முடியாது. தொழில்நுட்பத்தைக் கொண்டு பல தடைகளை உடைக்க முடியும் என்பதைப் பிரதமர் மோடி புரிந்து கொண்டுள்ளார். அது சரியானது என்றே நான் நினைக்கிறேன்.
ஆனால் அவருடைய சமூகப் பார்வை எனக்கு உடன்பாடு இல்லை. ஒவ்வொரு அரசும் முந்தைய அரசின் திட்டங்களைச் சார்ந்தே இருக்க வேண்டும் என நான் சொல்லவில்லை. ஆனால், முந்தைய அரசு செய்த விஷயங்களை எந்தவொரு அரசும் மறுக்க முடியாது. நமது நாட்டில் இருக்கும் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக வளர்ச்சி என ஏதுவாக இருந்தாலும் அது பல தலைமுறைகளாகப் பல அரசால் உருவாக்கப்பட்டது. இதை மறுக்க கூடாது.
மோடி தலைமையிலான பாஜக அரசு அனைத்து விஷயங்களையும் தவறாகவே செய்துள்ளனர் என்று நான் கூறமாட்டேன்.. நிச்சயமாக, அவர்கள் சில விஷயங்களைச் சரியாகவே செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் கருத்தியல் ரீதியாக, அவர்களின் சமூகப் பார்வை, மத்திய ஏஜென்சி எப்படிச் செயல்பட வேண்டும் என்பதில் அவர்கள் கருத்து, மாநிலங்கள் மற்றும் தனிநபர் சுதந்திரத்தின் மீது மத்திய அரசு செலுத்தும் கட்டுப்பாடு ஆகியவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை” என்றார்.