கோவை மாவட்டம், மதுக்கரை அருகே குரும்பபாளையம் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்துவைத்தார் பின்னர் மதுக்கரை வட்டாரத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது: டிஜிட்டல் எக்ஸ்ரேவுடன் கூடிய வாகனம் ஒன்று கோவைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காசநோயை தொடக்க நிலையில் கண்டறிய முடியும். கோவையில் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்க கூடுதலாக ஒரு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமரா பொருத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 95 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே சிகிச்சை பெறுகின்றனர். 5 சதவீதம் பேர் மட்டுமே தனியார் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர் என்றார்
மருத்துவக் கல்வி வழங்குவதில் நாட்டிலேயே முன்னணி மாநிலம் தமிழகம். இதைத் தொடா்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் முதல் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:-
நாட்டிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளை கொண்ட மாநிலமாகவும், நாட்டுக்கு அதிக மருத்துவர்களைத் தரும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் 5 ஆயிரத்து 50 மாணவர்கள் மருத்துவ படிப்பை மேற்கொள்கின்றனர்.
தமிழகத்தில் தற்போது 6 மாவட்டங்களில் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லை. இந்த மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்காக மத்திய அரசிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்றார்.
கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் 104 மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் 5 க்கும் மேற்பட்ட பாடங்களில் முதலிடம் பிடித்த மாணவி சுரேகா சிறந்த மாணவருக்கான கேடயத்தைப் பெற்றார். பல்வேறு பாடங்களில் முதலிடம் பிடித்த 27 மாணவா்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவில் மாணவா்கள் மட்டுமே மேடையேறி பட்டம் பெறுவர். ஆனால், நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் மா.சுப்பிரமணியன் பெற்றோர்கள் விரும்பினால் மாணவர்களுடன் இணைந்து பட்டங்களைப் பெற்றுகொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடா்ந்து, அனைத்து மாணவா்களும் தங்களது பெற்றோருடன் இணைந்து பட்டங்களைப் பெற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சமீரன், மருத்துவக் கல்வி இயக்குநர் ஆா்.நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குநர் (இ.எஸ்.ஐ) ராஜமூா்த்தி, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் நிர்மலா, மருத்துவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.