வக்ஃப் வாரிய சட்டத்தில் திருத்தம்… எதிர்க்கும் முஸ்லிம்கள்… அகிலேஷ் புகார்.!!

புதுடெல்லி: இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு வக்ஃப்கள் உள்ளன. இவற்றை, அந்தந்த மாநில அரசால் அமைக்கப்பட்ட வக்ஃப் வாரியம் கண்காணித்து, நிர்வகிக்கிறது. இந்த வக்ஃப் வாரியங்களை டெல்லியில் உள்ள மத்திய அரசின் தேசிய வக்ஃப் கவுன்சில் மேற்பார்வையிட்டு வருகிறது. இச்சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இறுதியில் வக்ஃப் வாரியங்கள் தொடர்பான சட்டத்தில் மத்திய அரசு 40 வகையான திருத்தங்கள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம்தாக்கலாக உள்ள இந்த மசோதாவுக்கு முஸ்லிம் அமைப்புகளும் எதிர்க்கட்சியான சமாஜ்வாதியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து இந்திய முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான, அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மறை மற்றும் தொண்டுப் பணிகளுக்காக முஸ்லிம்களால் தானமாக அளிக்கப்பட்ட சொத்துகளை முறைப்படுத்தவே வக்ஃப்கள் உருவாக்கப்பட்டன. அனைத்து வக்ஃப்களும் இந்திய அரசியலமைப்பின் ஷரீயத்சட்டம் 1937-ன் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படைத் தன்மையில் மத்திய அரசால் எந்த மாற்றமும் செய்ய முடியாது. எனவே, வக்ஃப்வாரியச் சட்டம் 2013-ல் அதிகாரத்தை குறைக்கவும், கட்டுப்பாடுகள் விதிக்கவும் மத்திய அரசால்எடுக்கப்படும் முயற்சி ஏற்கத் தக்கதல்ல” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்பிரச்சினையில் உ.பி.யின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, ‘வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் செய்து மத்திய அரசு முஸ்லிம் சகோதரர்களின் உரிமைகளை பறிக்க முயற்சிக்கிறது. இதை கடுமையாக எதிர்ப்போம். இந்து-முஸ்லிம் பிரிவினை, முஸ்லிம்கள்உரிமை பறிப்பை தவிர பாஜக வேறுஎதுவும் செய்யவில்லை. இதற்குமுன், ஆங்கிலோ இந்தியன் சமூகத்தின் உரிமைகள் போலி மக்கள்தொகை கணக்கெடுப்பை காட்டி மோடி அரசால் பறிக்கப்பட்டன. ஆங்கிலோ இந்தியர்களுக்கு எனநாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் இருந்த ஒதுக்கீடு தற்போது இல்லை” என்று தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவரான பிரபுல் பட்டேல், வக்ஃப் சட்டத் திருத்தம் குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். பிஹாரில் பாஜக ஆதரவுடன் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட சில கூட்டணி கட்சிகள், வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு அளித்துள்ளன.

நாடு முழுவதிலும் மொத்தம் 7,85,934 சொத்துகள் முஸ்லிம் வக்ஃப்களுக்கு இருப்பதாக நாடாளுமன்றத்தில் கடந்த 2022-ல் தெரிவிக்கப்பட்டது. நாட்டிலேயே அதிகமாக 2,14,707 சொத்துக்கள் உ.பி. வக்ஃப் வாரியத்திடம் உள்ளன. இவற்றில் உ.பி.யில்மட்டும் ஷியா பிரிவுக்கு தனியாக உள்ள வக்ஃப்க்கு 15,006 சொத்துகளும் உள்ளன. மற்ற மாநிலங்களில் உள்ள சன்னி முஸ்லிம் பிரிவின் வக்ஃப் வாரியங்களின் நிர்வாகத்தில் ஷியா முஸ்லிம் ஒருவர் கட்டாய உறுப்பினராக செயல்படுகிறார். உ.பி.யை தொடர்ந்து மேற்கு வங்க வக்ஃப்க்கு 80,480 சொத்துகள்உள்ளன. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திடம் 60,223 சொத்துகள் உள்ளன.