கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு குடோனில் செங்காந்தன் மலர் விதைகள் அடிக்கடி திருட்டு போனது. அதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த குடோன் உரிமையாளர் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் சிலரை பிடித்து அவர்களிடம் இருந்த பல லட்சம் ரூபாயை மீட்டனர் .அதில் அங்கு பணியாற்றி வந்த சப் இன்ஸ்பெக்டர் யூசுப், ஏட்டு சண்முக சுந்தரம் ஆகியோர் சேர்ந்து லட்சக்கணக்கான பணத்தை கையாடல் செய்துவிட்டு கைதானவர்களிடமிருந்து மீட்ட பணத்தை குறைவாக கணக்கு காட்டியதாக தெரிகிறது. இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன் பேரில் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அத்துடன் முதற்கட்டமாக அவர்கள் கோவை மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டனர். தொடர்ந்து துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் சப் இன்ஸ்பெக்டர் யூசுப்,ஏட்டு சண்முகசுந்தரம் ஆகியோர் திருட்டு வழக்கில் கைதானவர்களிடமிருந்து மீட்ட பணத்தில் ரூ.30 லட்சம் வரை கையாடல் செய்து விட்டு அந்த பணத்தை குறைத்து கணக்கு காட்டி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பணத்தை 2 பேரிடம் இருந்து போலீஸ் உயர் அதிகாரிகள் மீட்டனர். இந்த விசாரணை அறிக்கையை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் சமர்ப்பித்தனர். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் யூசுப் ஏட்டு சண்முக சுந்தரம் ஆகியோரை
“சஸ்பெண்டு” செய்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார். பணம் கையாடல் விவகாரத்தில் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கோவை மாநகர போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த மோசடி தொடர்பாக சிங்காநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் பார்வதி கட்டுபாட்டு அறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.. விசாரணையில் அவருக்கு இந்த மோசடியில் எந்த தொடர்பும் இல்லாததால் அவர் மீண்டும் சிங்கநல்லூர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்..