கோவை : கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ,கழிஞ்சாம் பாடியைச் சேர்ந்தவர் அஷ்ரப் .இவரது மகன் முகமது பயாஸ் ( வயது 21) இவர் கோவை சரவணம்பட்டி ஜி.கே.எஸ். நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் அறை எடுத்து தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார்.இவரது அறையில் அவருடன் படிக்கும் 6 மாணவர்கள் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். கடந்த 1ஆம் தேதி முகமது பயாஸ் தனது அறையில் தனியாக படுத்திருந்தார். அப்போது இரவில் திடீரென்று சிலர் வந்து கதவைத் தட்டினார்கள். உடனே அவர் எழுந்து கதவை திறந்தார். அப்போது வெளியே முகமூடி அணிந்து நின்று கொண்டு இருந்த 6 பேர் திபு , திபு என அறைக்குள் புகுந்தனர். பின்னர் வீட்டின் கதவை உள்பக்கமாக தாழ் போட்டுக் கொண்டு கையில் இருந்த அரிவாள், கத்தியை எடுத்து முகமதுபயாசை மிரட்டி உன்னிடம் இருக்கும் நகை பணம் மற்றும் பொருட்களை கொடுத்து விடு. இல்லை என்றால் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள். அத்துடன் அவர்கள் அந்த அறையில் இருந்த விலை உயர்ந்த 4 செல்போன்கள் ,ஒரு கைக்கடிகாரம்,பணம் ரூ. 4,300 ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். அந்த பொருட்களின் மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும். இதுகுறித்து முகமது பயாஸ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ஸ்டாலின் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையைச் சேர்ந்த போலீசார் முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் முகமூடிஅணிந்து கொள்ளையில் ஈடுபட்டது கோவை சரவணம்பட்டி அருகே உள்ள எஸ். என். எஸ். கல்லூரியில் படித்து வரும் 4 மாணவர்கள் என்பதும் அவர்களில் 2 பேர் எஸ் .என். எஸ் கல்லூரியில் படித்து முடித்த முன்னாள் மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது.. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட எஸ்.என்.எஸ். கல்லூரியில் பி.இ மெக்கானிக்கல் 3 -ம் ஆண்டு படித்து வரும் அஜய் பிரவீன் (வயது 19) பி .எஸ் . சி. பார்மசி 2-ம் ஆண்டு படித்து வரும் சந்தோஷ் (வயது 19) பி. இ 3-ம் ஆண்டு மாணவர்கள் நரேஷ் ( வயது19) குணாளன் ( வயது 19 )ஆகிய 4 மாணவர்களை போலீசார் கைது செய்தனர் .இதே கல்லூரி முன்னாள் மாணவர்களான வெற்றிவேல்,நிகில் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர் .கைதான 4பேரும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான எஸ் என். எஸ் கல்லூரி முன்னாள் மாணவர்களான வெற்றிவேல், நிகில் ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள் . சரவணம்பட்டி பகுதியில் வீட்டுக்குள் புகுந்து மாணவரிடம் முகமூடி அணிந்து கொள்ளையடித்த சம்பவத்தில் எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..