சென்னை: சென்னையில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவின் முன்னாள் ஐஜியான பொன் மாணிக்கம் வேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அவர் மீது வழக்கு பதிய கோரி முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி வழக்கு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள காமராஜர் சிலையில் வசித்து வருகிறார் பொன் மாணிக்கவேல். இவருடைய இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வந்து காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவின் டிஜிபியாக இருந்த காதர் பாட்சா மீது சிலை கடத்தியதாக பொன் மாணிக்கவேல் நடவடிக்கை எடுத்தார்.
தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொன் மாணிக்கவேல் மீது காதர் பாஷா ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தொடர்பாக இன்றைய தினம் இந்த சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2008ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் 3 உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த மூன்று சிலைகளையும் காவல் துறையில் பணியாற்றிய டிஎஸ்பி காதர்பாஷா, கோயம்பேடு காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றிய சுப்புராஜ் என்பவரும் விவசாயியுடன் சேர்ந்து விற்றதாக 2018 ஆம் ஆண்டு பொன் மாணிக்கவேல் வழக்கு பதிவு செய்தார்.
மேலும் அந்த வழக்கில் டிஎஸ்பி காதர் பாஷாவையும் எஸ்எஸ்ஐ சுப்புராஜையும் பொன் மாணிக்கவேல் கைது செய்தார். இந்த வழக்கை எதிர்த்து டிஎஸ்பி காதர் பாஷா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அதில் மன்றத்தால் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தன் மீதும் சில காவல்துறை அதிகாரிகள் மீது பொய் வழக்குப் போட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் 2023 ஆம் ஆண்டு சிபிஐ பதிந்த வழக்கின் அடிப்படையில் சென்னை பாலவாக்கத்தில் பொன் மாணிக்கவேல் வீட்டில் இந்த சோதனை நடந்தது. அவரிடமும் சிலைக் கடத்தல் வழக்கு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
1989ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வில் வென்று டிஎஸ்பியாக தேர்வானார் பொன் மாணிக்கவேல். இவர் 1996ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்விலும் பங்கேற்று சேலம் மாவட்ட எஸ்பி, உளவுப் பிரிவு டிஐஜி, சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர், ரயில்வே ஐஜி, சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி என பல்வேறு பொறுப்புகளை வகித்தார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார்.