புதுடெல்லி: சர்வதேச யானைகள் தினத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ள ட்வீட்டில், யானைகளுக்கு பாதுகாப்பான வாழ்விடத்தை உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச யானைகள் தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. யானைகள் வனத்தின் முக்கிய அங்கமாகும். வனத்தை பரப்புவதில் அவை முக்கிய பங்காற்றுகின்றன. யானைகள் விதைகளை பரப்பும் காரணியாக திகழ்ந்து வருகின்றன. ஆகவே பூமியின் மிகப்பெரிய பாலூட்டிகளான யானைகளைப் பாதுகாக்க இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. யானைகளின் பாதுகாப்பு மற்றும் வாழ்விடம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதிலும் இந்த நாள் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில் இன்று சர்வதேச யானைகள் தினத்தை ஒட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூகவலைதளப் பதிவில், ‘இந்த நாள் யானைகளைப் பாதுகாக்க ஒரு சமூகமாக இணைந்து எடுக்கும் நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் நாளாக உள்ளது. உலக யானைகள் தினத்தில், யானையைப் பாதுகாப்பதில் மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடரும் என உறுதி செய்கிறேன்.
ஆசிய யானைகளில் 60% இந்தியாவில் உள்ளன. இந்தியாவில் யானைகள் கலாச்சாரம், வரலாற்றின் அடையாளமாகவும் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. யானைகளைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன். அதே நேரத்தில், யானைகள் செழித்து வளரக்கூடிய வசதியான வாழ்விடத்தைப் பெறுவதை உறுதி செய்ய முடிந்த அனைத்தையும் செய்வோம் என்ற எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.’ என்று தெரிவித்துள்ளார்
உலகிலேயே அதிக யானைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. அதிலும் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் யானைகள் வாழ்கின்றன.