நாளை சுதந்திர தின விழா… கோவை பாதுகாப்பு பணிக்கு 2500 போலீசார் குவிப்பு.!!

நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (வியாழக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை வ. உ . சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது அந்த வகையில் கோவையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது .கோவை மாவட்டத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் மாநகர பகுதிகளில் 1700 போலீசாரும், புறநகரில் 800 போலீசாரும் என கோவை மாவட்டம் முழுவதும் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். சோதனை சாவடிகளில் இன்று இரவு விடிய, விடிய சோதனை நடத்தப்படுகிறது. இது தவிர ஓட்டல்கள் லாட்ஜ்கள் தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு உள்ளனர். கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவையில் உள்ள முக்கிய கோவில்கள்,வழிபாட்டு தலங்கள் மற்றும் தலைவர்கள் சிலைக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ( சி .ஐ .எஸ் .எப்) தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதே போல கோவை ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது .ரயில்வே போலீசாருடன், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களும் (ஆர்.பி.எப்) இணைந்து தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். கொடி ஏற்று விழா நடைபெறும் மைதானத்திற்கு 3 அடுக்க பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைதானத்துக்குள் வரும் பார்வையாளர்கள் “மெட்டல் டிடெக்டர் ” சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள் . மேலும் கோவையில் இன்று டிரோன் கேமிராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.