கோவை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி… நிர்வாண நிலையில் பயிற்சி பெண் டாக்டரை கட்டிப்பிடித்த வடமாநில வாலிபர் கைது.!!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பணி முடிந்து பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து தனது இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றார் . அப்போது அங்கு பதுங்கியிருந்த வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென்று தனது ஆடைகளை கழற்றி வீசிவிட்டு நிர்வாண கோலத்தில் அந்த பயிற்சி பெண் டாக்டரை கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த வாலிபரை தள்ளிவிட்டு கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு காவலாளி ஓடி வந்தார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார் .இது பற்றி சக பயிற்சி டாக்டர்களிடம் பாதிக்கபட்ட பயிற்சி பெண் டாக்டர் தெரிவித்தார். இதற்கிடையே நள்ளிரவு 1மணி அளவில் அந்த வாலிபர் சிறிய காயத்துடன் சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார் .அவரை அடையாளம் கண்டு கொண்ட பயிற்சி டாக்டர்கள் மடக்கி பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் சரவணபிரியா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார. போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மயான்க் கலார் (வயது 29)என்பது தெரிய வந்தது . மேலும் அவருடன் கோவைக்கு வந்தவர்கள் ரயில் நிலையத்தில் அவரை தனியாக விட்டு விட்டு சென்றதாகவும், அதனால் அவர் அங்கே 3 நாட்கள் சுற்றித்திரிந்ததாகவும் தெரியவந்தது. அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருக்கிறார்.ரேஸ்கோர்ஸ் போலீஸ்இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தார். இதையொட்டி நேற்று காலையில் மருத்துவமனைக்கு பணிக்கு வந்த 150 பயிற்சி டாக்டர்கள் திடீரென டீன் அலுவலகம் அருகே முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். பின்னர் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி 2 மணி நேரம் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அப்போது அந்த வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கழிவறை, மின்விளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். இதை யடுத்து அவர்களுடன் டீன் நிர்மலா பேச்சு வார்த்தை நடத்தினார் .பின்னர் அவர் கூறியதாவது:- கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளன. கூடுதல் கழிவறை உள்ளிட்ட வசதிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி உடனே நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்து இருந்தால் அவைகள் பழுது பார்க்கப்படும் .இரவு நேரத்தில் கூடுதல் ரோந்து பணியில் ஈடுபட காவலாளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.