கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை எவ்வித நிபந்தனையுமின்றி விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசனின் கோரிக்கைக்கு முன்னாள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் விமான நிலையமாக கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் திகழ்கிறது. சர்வதேச விமானங்கள் கூடுதலாக வந்து செல்லும் வகையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம்.
2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அதற்கான முனைப்பான பணிகளை முடுக்கிவிட்டது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு என ரூ.2,100 கோடி செலவு செய்து நிலங்களை கையகப்படுத்தி உள்ளது. அந்நிலங்களை ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க உள்ளது. விமான நிலைய ஆணையம் விரிவாக்கப் பணிகளை செய்யும். இந்நிலையில் தமிழ்நாடு அரசு, நிலங்களை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க நிபந்தனை விதித்துள்ளது. மாநில அரசால் ஒப்படைக்கும் நிலங்களைக் கொண்டு விரிவாக்கம் செய்யப்படும் போது எதிர்காலத்தில் தனியாருக்கு தாரை வார்க்கப்படக் கூடாது என்பதே அந்த நிபந்தனை ஆகும். ஆனால், விமான நிலைய ஆணையம் இந்த நிபந்தனையை தளர்த்திட வலியுறுத்தி வருகிறது.
மோடி தலைமையிலான பாஜக அரசு ஏற்கனவே ஏழு விமான நிலையங்களை தனியாருக்கு தாரை வார்த்து உள்ளது. மேலும், 16 விமான நிலையங்களை விற்க ஏற்பாடுகள் செய்து வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மோடி அரசின் கடந்த ஆட்சி காலத்தில் திருவனந்தபுரம் விமான நிலையத்தை கேரளா அரசே ஏற்று நடத்துவதாக தெரிவித்த போதும், அதை ஏற்காமல் அதானி குழும நிறுவனத்திற்கு விற்பனை செய்தது. அதன் பிறகு அங்கு விமான நிறுத்த கட்டணங்கள், வர்த்தக நிறுவனங்களின் வாடகை, வாகன நிறுத்துமிட கட்டணங்கள் உள்ளிட்டவை பல மடங்கு உயர்த்தப்பட்டது. விமான பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டனர். அப்போதே நாடாளுமன்றத்தில் இதனை கண்டித்து பேசியுள்ளேன். மேலும், இந்த அனுபவத்தை கணக்கில் கொண்டு தமிழ்நாடு அரசு நிபந்தனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். தமிழ்நாடு முதலமைச்சரிடம் இதுகுறித்து நேரிலும் வலியுறுத்தியிருந்தேன். இவற்றை கருத்தில் கொண்டுதான் தமிழ்நாடு அரசு தற்போது நிபந்தனை விதித்துள்ளது.
கோவை விமான நிலையத்திற்கு நிலம் அளித்தோர் அனைவரும் சாதாரண பொதுமக்களே. இம்மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பில் வாங்கிய நிலங்களை சந்தை மதிப்பிற்கும் பல மடங்கு குறைவாக அரசுக்கு அளித்துள்ளனர். பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் அளித்த நிலத்தை, தனியார் லாபம் பெறும் வகையில் அரசு பயன்படுத்தக்கூடாது. தமிழ்நாடு அரசு தனது நிபந்தனையில் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறேன்.
இந்நிலையில், தற்போது தமிழ்நாடு முதலமைச்சரை பாஜகவை சேர்ந்த கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வானதிஸ்ரீனிவாசன் சந்தித்துள்ளார். அதில், விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை ஒப்படைப்பதில், மாநில அரசு நிபந்தனையை தளர்த்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது தொகுதிக்குட்பட்ட உக்கடம் பகுதி மக்கள் வீடில்லாமல் அவதிப்படுகிறார்கள், அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்றோ, பாரதியார் பல்கலைகழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகள் மூன்று தலைமுறைகளாக இழப்பீடு கேட்டு நடையாய் நடந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கான இழப்பீடை வழங்க வேண்டும் என்றோ கோரிக்கை வைத்ததாய் தெரியவில்லை. மாறாக அதானி உள்ளிட்ட கார்ப்ரேட்டுகளின் தூதுவராய் சென்றிருப்பது வேதனை அளிக்கிறது. இது சரியானது அல்ல, அப்படி நிபந்தனை தளர்த்தப்படும் பொழுது, எதிர்காலத்தில் கோவை விமான நிலையம் தனியாருக்கு விற்கப்பட வாய்ப்புள்ளது. பொதுமக்களின் சொத்தாக விளங்க வேண்டிய ஒன்றை தனியாருக்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது. இந்த விஷயத்தில் மக்களின் சார்பாக நின்று பேச வேண்டிய பாஜகவினர் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தூதுவர்கள் போல பேசிக் கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக அரசு, இவர்களின் நோக்கங்களை உள்வாங்கிக் கொண்டு, ஏற்கனவே எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.