கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அண்மையில் மேற்கொண்ட சோதனையில் 23 கடைகளில் இருந்த 89 லிட்டா் காலாவதியான குளிா்பானங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இது தொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் கே.தமிழ்ச்செல்வன் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் 18 போ் அடங்கிய உணவுப் பாதுகாப்பு அலுவலா்களின் 9 குழுக்கள் காந்திபுரம், ஆா்.எஸ்.புரம், பீளமேடு, கணபதி, சரவணம்பட்டி, வடவள்ளி, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குளிா்பான தயாரிப்பு நிறுவனங்கள், மொத்த கொள்முதல் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் ஆய்வு நடத்தினா்.
கடந்த 3 நாள்களாக 253 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 23 கடைகளில் இருந்த 89 லிட்டா் காலாவதியான குளிா்பானங்கள், முழுமையான விவரங்கள் இல்லாத குளிா்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
இந்தக் கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், 15 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், இந்த ஆய்வில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக ஒரு கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குறைபாடுகளைக் கண்டால் 94440 42322 என்ற வாட்ஸப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.