இது என்னடா புது ஊழலா இருக்கு… 1 நாளைக்கு 993 முட்டை பப்ஸ் சாப்பிடும் ஜெகன்… 5 ஆண்டில் 18 லட்சம் முட்டை பப்ஸ்… 3.63 கோடிக்கு பில்.!!!

மராவதி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திர சட்டசபை தேர்தலும் நடைபெற்ற நிலையில் முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி படுதோல்வியை சந்தித்தார்.

வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக பரபரப்பு புகார் எழுந்திருக்கிறது. அந்த வகையில் ‘முட்டை பப்ஸ்’ விவகாரம் தற்போது ஆந்திர அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தில் 175 சட்டசபை தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதில் முதலமைச்சராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து களம் கண்டது.

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவோ பாஜக பவன் கல்யாண் ஜனசேனா கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். காங்கிரஸ் கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் கண்டது.

இந்த நிலையில் பரபரப்பாக நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ஒய்.எஸ்.ஆர் கட்சி அலுவலகங்கள், தொண்டர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும், ஆந்திராவின் முகம் போல பார்க்கப்பட்ட ஜெகன்மோகன் ரெட்டி கடும் சோதனைகளுக்கு உள்ளானார். குறிப்பாக சந்திரபாபு நாயுடுவை பொய் வழக்கு போட்டு கைது செய்ததாகவும், அவை முறையற்ற வகையில் நடத்தப்பட்டதாக பொதுமக்களே பொங்கி எழுந்தனர். மேலும் ஒரு முறை கூட மக்களை ஜெகன்மோகன் ரெட்டி நேரடியாக சந்திக்கவில்லை. இப்படி பல புகார்கள் எழுந்த நிலையில், தேர்தலுக்கு பிறகு அதற்கான பலனை அவர் அனுபவித்து வருகிறார். இதற்கிடையே பல்வேறு நிதி முறைகேடுகளிலும் ஜெகன்மோகன் ரெட்டி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

முதலமைச்சராக இருந்தபோது ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினருக்காக ரிஷிகொண்டாவில் அரண்மனை போன்ற ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. அந்த வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி பெரிய அளவில் பேசுபொருளானது. அதற்கு பிறகாக ரெட்டியின் குடும்பத்தினருக்கு அதிக அளவு பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்புவது, அவர்கள் விரைவாக பயணம் செய்வதற்கு சிறப்பு விமானங்கள், விடுமுறைகளை கொண்டாடுவதற்கு ஹெலிகாப்டர்கள் என அரசு பணத்தை பயன்படுத்தியதாக பரபரப்பு புகார் இழந்தது. இந்த நிலையில் ‘முட்டை பப்ஸ் ஊழல்’ என சமூக வலைதளங்களில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

அதாவது கடந்த ஐந்தாண்டுகளில் ஜெகன் மோகன் ரெட்டியும் அவரது சகாக்களும் தங்கள் அதிகாரத்தையும் பதவியையும் துஷ்பிரயோகம் செய்து அரசாங்க நிதியை கோடிக்கணக்கில் செலவு செய்திருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட அரசு உத்தரவுகள் மற்றும் பில்களை பார்க்கும்போது கோடிக்கணக்கில் அரசாங்க பணத்தை அப்பட்டமாக கொள்ளையடித்ததாக அப்போதே எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தன.

இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தனது பதவியை இழந்திருக்கும் நிலையில் அவர் செய்த ஒவ்வொரு முறைகேடுகளும் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் அலுவலகத்திற்கு 3.62 கோடி ரூபாய்க்கு முட்டை பப்ஸ் வாங்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.

அந்த வகையில் ஆண்டுக்கு மட்டும் சராசரியாக 72 லட்சம் ரூபாய் முட்டை பப்ஸ்களுக்காக செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு நாளைக்கு மட்டும் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி 993 முட்டை பப்ஸ் சாப்பிட்டு இருக்கிறார். 5 ஆண்டுகளில் மொத்தம் 18 லட்சம் முட்டை பப்ஸ் வாங்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

பப்ஸ்களுக்கு மட்டுமே ஐந்தாண்டுகளில் மூன்றே முக்கால் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்றால் மற்ற விவகாரங்களுக்கு ஜெகன்மோகன் ரெட்டி அரசு பணத்தை எந்த அளவுக்கு முறைகேடாக பயன்படுத்தியிருக்கிறார் என்பதை இதை வைத்தே கண்டுபிடிக்க முடியும் என மற்ற கட்சிகள் அவரை குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் ‘முட்டை பப்ஸ் ஜகன்மோகன் ரெட்டி’ என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.