தவெக கொடி அறிமுக விழாவில் ஷார்ட் அன்ட் கியூட்டா பேசிய விஜய்.!!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேற்றும் விழாவில் விஜய் கூறிய அந்த ஒரு வார்த்தையை கவனித்தீர்களா?

கட்சி தொடங்கியது முதல் உறுதிமொழி ஏற்றது வரை அனைத்திலும் அந்த வார்த்தைதான் இடம் பெற்றிருந்தது. இதை விஜய் ரசிகர்களும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளும் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்றைய தினம் கட்சிக் கொடியையும் நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார். இந்த விழாவுக்காக நடிகர் விஜய் தனது நீலாங்கரை வீட்டிலிருந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை புஸ்ஸி ஆனந்து வரவேற்றார். இந்த விழாவில் கட்சியின் பொருளாளர், கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விஜய்யின் கொடி அறிமுக விழாவிற்கு அவருடைய தாய் ஷோபாவும், தந்தை சந்திரசேகரும் வருகை தந்தனர். இதையடுத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் விஜய் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். அதில் சிவப்பு , மஞ்சள் நிறத்தில் கொடியிருந்தது. நடுவே வெற்றிக்கு அடையாளமான வாகை மலரும், இரு போர் யானைகளும் இருந்தன.

இந்த கொடியை பனையூர் கட்சி அலுவலகத்திலும் அவர் ஏற்றி வைத்தார். இதை தவெக நிர்வாகிகள் கைதட்டி வரவேற்றார். பிறகு கொடி பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது. கொடி அறிமுக விழாவில் நடிகர் விஜய் பேசுகையில் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களாகிய உங்கள் முன்பும் (நிர்வாகிகள்), தமிழக நாட்டு மக்களின் முன்பும் கொடியை அறிமுகப்படுத்தியதில் பெருமை அடைகிறேன். கட்சி ரீதியிலாக தயார்படுத்தி தமிழகம், தமிழக மக்களின் உயர்வுக்காக உழைப்போம்.

புயலுக்கு பின் ஒரு அமைதி என்பதை போல் கொடிக்கு பின்னர் ஒரு வரலாற்று குறிப்பு இருக்கிறது, அந்த வரலாற்றை நீங்கள் ஆவலுடன் காத்திருக்கும் அந்த நாளில் (மாநாடு) சொல்கிறேன். முதல் மாநாடு எப்போது என்பதை விரைவில் சொல்கிறேன். அது வரை சந்தோஷமா, கெத்தா, நமது கொடியை ஏற்றி கொண்டாடுங்கள். இது கட்சிக்கான கொடி இல்லை, தமிழகத்தின் வருங்கால தலைமையின் வெற்றிக்கான கொடியாகவே நான் பார்க்கிறேன்.

இந்த கொடியை உங்கள் உள்ளத்தில் இல்லத்தில் ஏற்றி வைத்து கொண்டாடுங்கள் என நான் உங்களுக்கு சொல்லித் தர தேவையில்லை, நீங்களே செய்வீர்கள். ஆனாலும் அதற்கான அனுமதியை வாங்கி கொடியை இல்லங்களில் ஏற்றிக் கொள்ளுங்கள். அது வரை நம்பிக்கையுடன் இருங்கள். மீண்டும் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன், நன்றி வணக்கம் என விஜய் பேசினார்.

இந்த உரையில் அவர் வெற்றி என்பதை பிரதானப்படுத்தி பேசியிருந்தார். இப்போது என்றில்லை, கட்சி தொடங்கியதும் அந்த கட்சியின் பெயரிலும் வெற்றியை வைத்துள்ளார். பிறகு கட்சியின் கொடியில் வெற்றியை குறிக்கும் வாகை மலரை வைத்துள்ளார். பிறகு கொடியின் பாடலிலும் வெற்றி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் கட்சி போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க விஜய் போராடி வருகிறார். அது போல் விஜய்க்கு சிறு வயது முதலே அரசியலில் ஆர்வம் உள்ளதாக தெரிகிறது. அவருக்கு எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் கட்சியை தொடங்கி வெற்றி பாதையை நோக்கி பயணிக்கிறார்.