புதியதாக 5 மாவட்டங்கள்.. மோடியின் தொலை நோக்கு சிந்தனையை புகழ்ந்த அமித்ஷா..!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தில் புதியதாக 5 மாவட்டங்களை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், “வளர்ந்த மற்றும் வளமான லடாக்கைக் கட்டியெழுப்புவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின்,

தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றும் வகையில், இன்று லாடாக்கில் புதியதாக 5 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

புதிய மாவட்டங்களான ஸன்ஸ்கார், த்ராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங், ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நிர்வாகத்தை மேம்படுத்தும். இதன் மூலம் மக்கள் நலத்திட்டங்கள், மக்களின் வீட்டு வாசல்களிலேயே கொண்டு சேர்க்கப்படும்” என்று கூறியுள்ளார். விரைவில் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இப்படி இருக்கையில் தற்போது லடாக்கில் புதியதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் கவனம் பெற்றிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் செப்.18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஆக.20ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக.27ம் தேதி. அதேபோல ஆக.30 வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். இரண்டாம் கட்ட தேர்தல் செப்.25ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் ஆக.29ம் தேதி தொடங்குகிறது. செப்.5ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.9 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.

மூன்றாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக்டோபர் மாதம் 1ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் செப்.5ம் தேதி தொடங்குகிறது. செப்.12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.17 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன.

தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர், ஜம்மு காஷ்மீர் சென்று, தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். குறிப்பாக இங்கு, பாஜக வெறும் 20 தொகுதிக்குள் முடக்க வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது. இந்நிலையில், பாஜக வெறும் 60-70 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில், ஜம்மு காஷ்மீர் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இதில், அமித்ஷா, நட்டா என முக்கிய தலைவர்கள் பங்கேற்றிருக்கின்றனர். இதில், பாஜக வெற்றி வாய்ப்புக்கான தொகுதிகள் எது? கூட்டணியுடன் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இதன்போது, ஜம்மு காஷ்மீரில் 60-70 தொகுதிகளில் மட்டும் கட்சி போட்டியிட்டால் போதும் என முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.