ஐசிசியின் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு..!

ர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக 2வது முறையாக தற்போது பதவி வகித்து வரும் கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இத்தகைய சூழலில் தான் கடந்த 20ஆம் தேதி தற்போதைய ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே மூன்றாவது முறையாக ஐசிசி தலைவராக பதவியேற்க மாட்டார் என்றும், நவம்பரில் அவரது பதவிக்காலம் முடிவடையும் போது பதவி விலகுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இளம் வயதில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெருமையை ஜெய் ஷா பெற்றுள்ளார். பிசிசிஐயின் கவுரவச் செயலாளராக தற்போது பதவி வகித்து வரும் ஜெய் ஷா, ஐசிசியின் தலைவராக டிசம்பர் 1ஆம் (01.12.2024) பதவி ஏற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் ஐசிசியின் தலைவராகும் 3வது இந்தியர் ஜெய்ஷா ஆவார். ஏற்கனவே ஜக்மோகன் டால்மியா மற்றும் சரத்பவார் ஆகியோர் ஐசிசி தலைவராக பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெய் ஷா இது குறித்துத் தெரிவிக்கையில், “ஐசிசிஉறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவேன். கிரிக்கெட்டை உலகமயமாக்க உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.