கோவை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் கண்டறியும் தானியங்கி கருவி மற்றும் மருத்துவ பரிசோதனை மையம் – மா.சுப்பிரமணியம் ஆய்வு.!

உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல் படி, 127 நாடுகளில் குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய, மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பரிசோதனை முகாமினை, சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் இன்று ஆய்வு செய்தார். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்டறியும் தானியங்கி கருவி பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை அறியையும் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா சுப்பிரமணியம் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கிறது என்றார். குரங்கம்மை நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே பதாகையில் அமைக்கப்பட்டிருக்கிறது என்றார். பாதிப்புகள் கண்டறியப்பட்டால் இந்த நான்கு நகரங்களிலும் இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கையாக மருத்துவ சிகிச்சை தனி வார்டுகள் அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையின்படி 127 நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை நோய் தமிழகத்தில் பரவாமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, நோயாளிகளின் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.