அடடா!! வியப்பூட்டும் ஆளுயுர பாதாம், முந்திரி மாலை… நிலக்கோட்டை பூக்கடையில் ரூ.4 லட்சத்துக்கு விற்பனை..!!

பாதாம், முந்திரி மாலைநாகர்கோவில் அருகே கீழ வண்ணன் விளை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வன்னியடிமர சுவாமி ஆலயத்தில் ஆவணி கொடை விழா நடக்கவுள்ளது. இதில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார மாலை செலுத்துவதற்காக நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் உள்ள மாலை கட்டுவோரை அணுகியுள்ளனர். அவர்கள் ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை, பாதாம் உள்ளிட்ட உலர் பழங்களைக் கொண்டு அலங்கார மாலை தயாரித்து கொடுப்பதாக ஆர்டர் எடுத்துள்ளனர். அதன்படி, கடந்த 20 நாள்களாக மாலைகட்டும் கலைஞர்கள் 100 பேர் உலர் பழங்களாலான மாலை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை பாதாம் உள்ளிட்ட உலர் பழங்களைக் கொண்டு ஒவ்வொன்றையும் நேர்த்தியாக கோர்த்து பிரமாண்ட மாலைகளை வடிவமைத்தனர். அதிக அளவில் ஏலக்காய் பயன்படுத்தப்பட்டும் மாலையில் கோர்க்கப்பட்ட உலர் திராட்சை, முந்திரி, பாதாம் ஆகியவை செதுக்கி வைக்கப்பட்ட சிலை போல் மாலை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டது. இதில் 4 அடி உயரத்தில் 44 கிலோ எடையில் 1 மாலையும், 8 அடியில் 80 கிலோ எடையில் 2 மாலைகளும் தயாரிக்கப்பட்டு நிலக்கோட்டை பூ மார்க்கெட் கடையில் வைக்கப்பட்டிருந்த மாலையை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்துச் சென்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பூக்கடை உரிமையாளர் முருகன், ”கடந்த ஆண்டும் இதே கோயில் கொடை விழாவுக்காக இதேபோன்ற மாலையை செய்து கொடுத்தோம். இந்த ஆண்டும் அதேபோல மாலை வேண்டும் எனக் கேட்டனர். அதன்படி தங்க நகை ஆபரணம் செய்யும் நேர்த்தியில் பூமாலை செய்யும் அழகில் உலர் பழங்களால் ஆன மாலை செய்துள்ளோம். இந்த 3 மாலைகளை 4 லட்ச ரூபாய்க்கு கொடுத்துள்ளோம்” என்றார்.