கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு துறை ஊழியர்கள் மற்றும் மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர நேற்று உக்கடம் லாரிப்பேட்டையில் உள்ள மொத்த மீன் மார்க்கெட், செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள சில்லறை மீன் மார்க்கெட் ஆகிய மார்க்கெட்டுகளில் திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் மொத்த மீன் மார்க்கெட்டில் உள்ள 5 கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 62 கிலோ கெட்டுப்போன மீன்களும் ,சில்லறை மீன் மார்க்கெட்டில் 4 கடைகளில் இருந்த 38 கிலோ கெட்டுப்போன மீன்களும் என மொத்தம் 103 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.. இதன் மதிப்பு ரூ.50.ஆயிரத்து 150 ஆகும். கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த தொடர்பாக 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்ச்செல்வன் கூறியதாவது:- மீன்களின் செவுள் பகுதியை வைத்து நல்ல மீன் எது ? கெட்டுப்போன மீன் எது ? என்பதை கண்டறிய முடியும். மீன்களின் செவுள் ரத்த நிறத்தில் காணப்பட்டால் அது நல்ல மீன். மாறாக செவுள் பகுதி வெளிர் அல்லது சாம்பல் நிறத்தில் காணப்பட்டால் அது கெட்டுப்போன மீன் என கூறி விடலாம். மேலும் நமது விரலால் மீனின் வயிறு பகுதி அமுக்கிவிட்டு விரலை எடுக்கும் போது அந்த இடம் பழைய நிலைக்கு வந்தால் நல்ல மீன்.மாறாக விரல் வைத்து அழுத்திய இடத்தில் குழி விழுந்தால் கெட்டுப் போன மீனாகும். மீன்களின் கண்கள் உள்ளே சென்றிருந்தால் அந்த மீன் கெட்டுப் போயிருக்கும். இதுபோன்று கெட்டுப் போற மீன்களை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, தலைசுற்றல், குமட்டல், வாந்தி, உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும். கெட்டுப்போன மீன்கள் விற்பனை குறித்து தெரியவந்தால் பொதுமக்கள் அது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்..