விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியைக் குறிப்பிட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவதூறு பாடல் ஒன்றைப் பாடினார். இது சர்ச்சையானது. பின்னர் இதுதொடர்பாகப் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சாட்டை துரைமுருகனுக்கு ஆதரவாக அதே பாடலைப் பாடினார். இதையடுத்து ஒரு சமூகத்தின் பெயரைப் பயன்படுத்தி அவதூறாக பாடல் பாடியதாக சீமான் மீது சென்னை பட்டாபிராம் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்திருந்தார். ஆனால், அந்தப் புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து புகார் கொடுத்த நபர் மாநில தாழ்த்தப்பட்டோர் பழங்குடி ஆணையத்தில் முறையிட்டார். தாழ்த்தப்பட்டோர் பழங்குடி ஆணையம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தியது. இதன்பின் சீமான் மீது வழக்குப் பதிய உத்தரவிட்டது.
அதன்படி, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் சீமான் மீது பட்டாபிராம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. ஒரு சமூகத்தின் பெயரைப் பயன்படுத்தி அவதூறாக பாடல் பாடியதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக உதவி கமிஷனர் சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர் தலைமையிலான காவல்துறையினர் இந்த வழக்கின் விசாரணையை நேற்று துவங்கியது.
இதன் தொடர்ச்சியாக சீமானை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் சீமான் விசாரணைக்கு ஆஜராகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.