திமுக கழக பவளவிழா… கழகத்தினர் வீடுகளிலும் கழகக் கொடி ஏற்றிக் கொண்டாடுவோம் – முதல்வர் ஸ்டாலின்..!

1949 செப்.17-ம் தேதி பேரறிஞர் அண்ணாவால் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது வரை தமிழ்நாட்டில் அசைக்க முடியாத ஒரு கட்சியாக இருக்கும் திமுகவின் 75 ஆண்டுகளை வெற்றிகரமாக கடக்க இருக்கிறது. 75 ஆண்டுகாலமாக மக்கள் சேவையாற்றி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. சுயமரியாதை, தமிழினம், முற்போக்கு சிந்தனை என மக்களுக்கு தொடர்ந்து சித்தாத்தங்களை வழங்கி வருகிறது. இந்த சூழலில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்.15), தந்தை பெரியார் பிறந்தநாள் (செப்.17), கழகம் தொடங்கிய நாள் (செப்.17) என்ற மூன்றையும் இணைந்து ஆண்டுதோறும் முப்பெரும் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு செப்.17-ம் தேதி சென்னை, YMCA மைதானத்தில் கழக முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு கழகத்தின் பவள விழா ஆண்டாக இருப்பதால் அனைத்து கழகத்தினர் வீடுகளிலும் கழக கொடியேற்றி கொண்டாட வேண்டும் என கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.

கழக ஒருங்கிணைப்புக்குழுவுடன் நேற்று (செப்.8) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கழகப்பணிகள் மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக கழகத்தின் பவளவிழாவை முன்னிட்டு கழகத்தினர் அனைவரது இல்லங்கள்- அலுவலகங்கள்- வணிகவளாகங்களில் கழகக்கொடி ஏற்றிக் கொண்டாடிட வேண்டும் என்ற கழகத்தலைவரின் அறிக்கை வெளியிடப்படுகிறது.