கமலா ஹாரிஸ் VS டொனால்டு டிரம்ப்… காரசார விவாதம்.!!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு மேல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் பேசும் போது, டிரம்ப கோடீஸ்வரர்களுக்கு ஆதரவாக சலுகைகளை அள்ளி வழங்கியதாக கூறினார். அப்போது டிரம்ப் பேசுகையில், கமலா ஒரு மார்க்சிஸ்ட் என்று கடுமையாக பேசினார். விவரமாக பார்ப்போம்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு இன்னும் எட்டு வாரங்கள் உள்ளன. இந்த தேர்தலில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போது அமெரிக்காவை ஆளும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். இருவரும் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான நேரடி விவாதத்தில் பங்கேற்றனர்.. விவாதத்தின் தொடக்கத்தில், ஹாரிஸ் மற்றும் டிரம்ப் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இருவருமே கைகுலுக்கினர். இதன் மூலம் அதிபர் தேர்தல் விவாத மேடையில் கைகுலுக்கல் இல்லாத எட்டு வருட தொடர் நிகழ்வுகள் முடிவுக்கு வந்துள்ளது.

இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும். விவாதம் தொடங்கியதும் டெனால்டு டிரம்ப் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள கமலா ஹாரிஸ் பேச ஆரம்பித்தார். அப்படி பேச தொடங்கியவரிடம் அமெரிக்க மக்களின் பொருளாதாரம் மற்றும் அவர்களின் வாழ்க்கைச் செலவு பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும்படி கேட்கப்பட்டது.

அப்போது கமலா ஹாரிஸ் கூறுகையில், இந்த கேள்வி அமெரிக்கக மக்களின் மனதில் அதிகம் இருக்கிறது. நடுத்தர வர்க்க பின்னணி உடைய என்னை உயர் பதவிக்கு தேர்ந்தெடுத்தால்,, அமெரிக்க குடும்பங்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள சிறு வணிகங்களுக்கு பயனளிக்கும் வகையிலான திட்டங்களை செயல்படுத்துவேன் என்று பேசினார் (திட்டங்கள் பற்றியும் விவரித்தார்).

தொடர்ந்து டொனால்டு டிரம்பை குறிவைத்து கமலா ஹாரிஸ் பேசுகையில் ” டிரம்ப் அதிபராக இருந்த போது கோடீஸ்வரர்களுக்கும் மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வரிக் குறைப்புகளை வாரி வழங்கி வந்தார் என்றார். மேலும் ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்றபோது,. டிரம்ப் பொருளாதாரத்தை விட்டு வெளியேறிய நிலை பற்றி உங்களுக்கே தெரியும் அல்லவா என்று நினைவூட்டினார். தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த கமலா ஹாரிஸ், ஒரு கட்டத்தில் டிரம்பை பார்த்து, “டொனால்ட் டிரம்ப் உங்களிடம் மக்களுக்கான எந்த திட்டமும் இல்லை” என்று கடுமையாக பேசினார்.

இப்படியாக விவாதம் சூடுபிடிக்க தொடங்கிய உடன், பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்கிற பாணியில், வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறுபவர்கள் குறித்த ஜோ பைடன் நிர்வாகத்தின் செயல்களை சுட்டிக்காட்டியும், கமலா ஹாரிஸை குறிவைத்து விமர்சித்தும் டிரம்ப் பதிலளித்தார். ஒரு கட்டத்தில் டிரம்ப் கமலா ஹாரிஸை பாரத்து “நீங்கள் அதே பழைய கிழிந்த ரெக்கார்டை எடுக்க போறீங்க.. அதில் முழுக்க பொய்களும், குறைகளும், மற்றும் பெயருக்கு சில விஷயங்களும் தான் இருக்கும்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட கமலா ஹாரிஸ், “டொனால்ட் டிரம்ப் நம் நாட்டை எப்படி விட்டுச் சென்றார் என்பது பற்றி பேசுவோம். பெரும் மன அழுத்தத்திற்கு மக்கள் ஆளான காலக்கட்டத்திற்கு பிறகே, டொனால்ட் டிரம்ப் நம்மை மோசமான வேலையில்லாத திண்டாட்ட நிலையுடன் விட்டு போனார் (அதிபர்பதவியில் இருந்து தோற்று வெளியேறினார்). டொனால்ட் டிரம்ப் ஒரு நூற்றாண்டில் மோசமான தொற்றுநோயை நம்மிடம் விட்டார். டொனால்ட் டிரம்ப் நமது ஜனநாயகத்தின் மீது மிக மோசமான தாக்குதலை நடத்தி விட்டு சென்றார். எனவே அவர் அதிபராக இருந்து செய்த குழப்பத்தையே இன்னும் சுத்தம் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது” என்றார்.

இப்படி கடுமையாக கமலா ஹாரிஸ் பேசத் தொடங்கியதும், ஒரு கட்டத்தில், டிரம்ப் தனிப்பட்ட தாக்குதலுக்கு மாறினார். “கமலா ஹாரிஸ் ஒரு மார்க்சிஸ்ட். அவருடைய தந்தை ஒரு மார்க்சிஸ்ட்” என்று கடுமையாக பேசினார். அப்போது ஹாரிஸ் முழுவதும் சிரித்துக்கொண்டே காணப்பட்டார். கோவிட் தொற்றுநோய்களின் போது நான் செய்த சிறந்த வேலைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை . கோவிட் பாதிப்பின் போது, என் தலைமையிலான அரசு அற்புதமான வேலையைச் செய்தது என்றார்.

தொடர்ந்து கருக்கலைப்பு பற்றி பேசிய கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக வந்தால் கருக்கலைப்புகளை தடை செய்வார் என்று எச்சரித்தார். அதற்கு டிரம்ப் உடனே “கமலா பொய் சொல்கிறார்” என்று பதிலளித்தார். இப்படியாக விவாதம் அனல் பறந்து நடந்து கொண்டிருந்தது.