வடமாவட்டங்களில் இன்று கடைகள் அடைப்பு… வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையனின் உடல் அடக்கம்…

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த. வெள்ளையனின் உடல் நாளை மாலை அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

மறைந்த வெள்ளையனின் உடலுக்கு பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். வெள்ளையனின் மறைவையொட்டி, தமிழகத்தில் இன்றும், நாளையும் 2 நாட்கள் கடையடைப்பு பேராட்டம் நடக்கிறது.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவராக பதவி வகித்து வந்தவர் த.வெள்ளையன்… பல வருடங்களாகவே, வணிகர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார்.. அத்துடன் பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளார்..

76 வயதுடைய வெள்ளையன் கடந்த சில வருடங்களாகவே நுரையீரல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்ததுடன், அதற்கான மருந்துகளையும் எடுத்து வந்தார். உடல்நலம் மோசமானதால், கடந்த 3ம் தேதி அமைந்தக்கரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. ஆரம்பத்தில் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்ட வெள்ளையன், கடந்த 5தேதி முதல் ஐசியூவுக்கு மாற்றப்பட்டார்.. டாக்டர்கள் தீவிரமான சிகிச்சை தந்துவந்தபோதிலும், பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

வெள்ளையன் மறைவை அடுத்து வணிகர் சங்க கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட உள்ளன. தமிழகம் முழுவதிலுமிருந்து வணிகர்கள் சென்னைக்கு வந்து நேரில் அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர். வெள்ளையன் மறைவுக்கு தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

வெள்ளையன் மறைவையொட்டி முதல்வர் ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்திருந்தார்.. வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக அறிக்கையும் வெளியிட்டிருந்தார். வெள்ளையன் உடல் நேற்றைய தினம், பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைப்பட்ட நிலையில், இன்று அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அவரது சொந்த ஊரான திருச்செந்தூரை அடுத்த பிச்சிவிளை கிராமத்தில் உள்ள தோட்டத்தில் அவரது தந்தையின் கல்லறைக்கு அருகே வெள்ளையனின் உடல் நாளை மாலை 4 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது..

இதனிடையே, வெள்ளையனின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழகத்தில் கடையடைப்பு நடத்தப்போவதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் 2 நாட்கள் தமிழகத்தில் கடையடைப்பு பேராட்டம் நடைபெற உள்ளது. அதன்படி இன்று வடமாவட்டங்களிலும், நாளை தென்மாவட்டங்களிலும் கடையடைப்பு நடத்தப்பட உள்ளது. இந்த தினங்களில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையில் செயல்படும் கடைகள் அடைக்கப்பட உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை வணிகர் சங்க பேரவையின் பொதுச்செயலாளர் சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.