சிகிச்சையின் போது கீழே விழுந்து சிறுவன் கால் முறிவு – டாக்டர், மனைவி கைது..!

சென்னை, அம்பத்தூர், கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் ( வயது 70) இவரது பேரன் இக்சிட் (வயது 7) இந்த சிறுவன் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தான். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை ஆர் எஸ் புரம் , ராபர்ட்சன் ரோட்டில் உள்ள அஜய் நீரோ கிளினிக் என்ற மருத்துவமனைக்கு ராமச்சந்திரன் தனது பேரனை அழைத்து வந்திருந்தார். சிறுவனை பரிசோதித்து பார்த்த அந்த மருத்துவமனையின் டாக்டர் பாலாஜி சக்கரவர்த்தி பூரணமாக குணப்படுத்தி விடுவதாக கூறினாராம். இதை நம்பி ராமச்சந்திரன் முதல் கட்டமாக ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மருத்துவ கட்டணமாக செலுத்தினார். சிகிச்சை அளிக்கப்பட்டது . சிகிச்சையின் போது சிறுவன் தவறி கீழே விழுந்து இடது கால் முறிவு ஏற்பட்டது. தவறான சிகிச்சையினால் தன் பேரனின் காலில் முறிவு ஏற்பட்டதாகவும், அவர் எலும்பு முறிவு சம்பந்தப்பட்ட மருத்துவ படிப்பு படிக்கவில்லை என்றும் ராமச்சந்திரன் ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் டாக்டர் பாலாஜி சக்கரவர்த்தி பிளஸ் 2 படித்து விட்டு டிப்ளமோ  படித்தவர் என்பது தெரிய வந்தது . இது தொடர்பாக வீரகேரளம், பானு கார்டனை சேர்ந்த டாக்டர் பாலாஜி சக்கரவர்த்தி (வயது 46 ) அவரது மனைவி செல்வி (வயது 52) ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது மோசடி உட்பட இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..