விறுவிறுப்பாக நடக்கும் இலங்கை அதிபர் தேர்தல்… வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகும் ராஜபக்சேவின் குடும்பம்… பின்ணனி என்ன..?

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்து வரும் நிலையில் ராஜபக்சே குடும்பத்தினர், ஆதரவாளர்கள் வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகி வருகின்றன. அதிபர் வேட்பாளராக போட்டியிடும் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவின் மனைவி உள்பட 3 பேர் அவசர அவசரமாக விமான நிலையம் சென்ற நிலையில் அதன் பின்ணனி பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் மொத்தம் 225 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் எஸ்எல்பிபி எனும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா 105 இடங்களை வென்றது. இது ராஜபக்சேவின் கட்சியாகும். இதையடுத்து கோத்தபய ராஜபக்சே அதிபர் ஆனார்.

அதேபோல் முன்னாள் அதிபரான மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவி வகித்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் வன்முறை வெடித்தது. பொருளாதார நெருக்கடி, ஆளும் கட்சிக்கு எதிராக மக்களின் போராட்டம் உள்ளிட்டவற்றால் இலங்கையில் தீக்கிரையானது.

இதையடுத்து மஹிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சேவும் ராஜினாமா செய்து வெளிநாட்டுக்கு தப்பினார். இதையடுத்து இதையடுத்து இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்படார். தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்து வருகிறது.

தற்போதைய அதிபர் ரணில்விக்ரமசிங்கே சுயேட்சையாக போட்டியிடுகிறார். அதேபோல் தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த அனுர குமார திஸனநாயகே, எதிர்க்கட்சி தலைவராக உள்ள எஸ்ஜேபி எனும் சமாகி ஜன பலவேகய கட்சியின்

சஜித் பிரேமதாசா, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். ஈழத்தமிழர் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் களமிறங்கி உள்ளார். மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி மொத்தம் 35 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இன்று மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு இரவு 9 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும். அதன்பிறகு நாளை மதியத்துக்குள் இலங்கையின் புதிய அதிபர் யார்? என்பது தெரிந்துவிடும்.

இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ராஜபக்சேவின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலையில் ராஜபக்சே கட்சியின் அதிபர் வேட்பாளரான நாமல் ராஜபக்சே அம்பாந்தோட்டை தொகுதியில் டிஏ ராஜபக்சே மகா வித்தியாலாவில் ஓட்டளித்தார். அவர் தனது மனைவி லிமினி வீரசிங்கேவுடன் வந்து ஓட்டளித்தார்.

அதன்பிறகு லிமினி வீரசிங்கே அவசர அவசரமாக இலங்கையில் விமான நிலையத்துக்கு சென்றார். அவருடன் மேலும் 2 பேர் இருந்தனர். இவர்கள் 3 பேரும் வெளிநாட்டுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் இன்று இரவு ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பு ராஜபக்சே குடும்பத்தினர் மேலும் சிலர் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் ராஜபக்சேக்களின் ஆதரவாளர்களும் இலங்கையை விட்டு புறப்பட்டுள்ளனர்.

முன்னதாக நேற்றைய தினம் பசில் ராஜபக்சே இலங்கையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றிருந்தார்.அங்கிருந்து அவர் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் நேற்று மஹிந்த ராஜபக்சேவின் தீவிர ஆதரவாளரும், சர்ச்சைக்குரிய நபருமான டான் பிரியசாத் இலங்கையை விட்டு தப்பி செல்ல முயன்றார். துபாய் செல்வதற்காக அவர் விமான நிலையம் சென்ற நிலையில் அவரது பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்து திருப்பி அனுப்பினர். இந்த டான் பிரியசாத் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளது. குறிப்பாக கடந்த 2022ம் ஆண்டில் ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக மக்கள் போராடினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கியதாக அவர் மீது வழக்கு உள்ளது.