கோவையில் அதிர்ச்சி… மெடிக்கல் ஸ்டோரில் வயிற்று வலிக்கு ஊசி போட்ட இளைஞர்… சிறிது நேரத்தில் திடீர் மரணம்… டாக்டர் கைது..!

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பக்கம் உள்ள செஞ்சேரி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கிட்டான் . இவரது மகன் பிரபு ( வயது 21) டிரைவர் .நேற்று முன்தினம் இவருக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது .இதனால் அங்குள்ள தாஸ் மெடிக்கல் சென்டருக்கு சிகிச்சைக்காக சென்றார் . அங்கு வயிறு வலிப்பதாகவும் அதற்கு சிகிச்சை அளிக்குமாறு கூறினார் .இதையடுத்து அவருக்கு ஊசி போட்டனர். அதன் பின்னர் பிரபு வீடு திரும்பினார்.வீட்டில் பாத்ரூமுக்கு குளிக்க சென்றவர். நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகத்தில் பாத்ரூமில் சென்று பார்த்த போது அங்கு பிரபு மயங்கி கிடந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள செஞ்சேரி மலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பிரபு இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சுல்தான்பேட்டை போலீசார் விரைந்து சென்று பிரபுவின் உடலை மீட்டு சிங்காநல்லூர் இ. எஸ். ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பிரபுவின் சாவுக்கு காரணமான மெடிக்கல் ஸ்டோரில் செலுத்தப்பட்ட தவறான மருந்து தான் என கூறி பிரபுவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிங்காநல்லூர் இ.எஸ் ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போலி மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்கமாட்டோம் என்று கூறினார்கள். அவர்களை போலீசார் சமரசம் செய்து உடவை வாங்க வைத்தனர் . இது தொடர்பாக கோவை மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரன் மற்றும் சுகாதாரத் துறையினர் நேற்று காலை சம்பந்தப்பட்ட மெடிக்கல் ஸ்டோரியில் ஆய்வு நடத்தினர். ஆய்வில் ஜார்ஜாவில் மருத்துவம் படித்த விக்டர் ஜீவராஜ் இந்தியாவில் மருத்துவம் பார்ப்பதற்கான தேர்வு எழுதாமலும், மருத்துவமனை நடத்த தமிழ்நாடு அரசின் உரிமம் பெறாமல் இருந்ததும், படுக்கை வசதி இல்லை என்று விண்ணப்பித்து விட்டு 5 படுக்கையுடன் மருத்துவமனை நடத்தி வந்ததும் தெரிய வந்தது .இதையடுத்து சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த மருத்துவமனையில் இருந்த ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து சுல்தான் பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டர் விக்டர் ஜீவன் ராஜை கைது செய்தனர்.போலி மருத்துவமனை மூடப்பட்டது..