கொலை குற்ற சம்பவத்தில் தேடப்பட்ட ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த திருச்சி போலீஸ்..!

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆட்டுக்குட்டி சுரேஷ் கொலையில் தொடர்புடைய ரவுடி ஜம்பு என்கிற ஜம்புகேஸ்வரனை ஸ்ரீரங்கம் போலீசார் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். திருச்சி கல்லணை சாலை அருகே கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஜம்புகேஸ்வரனை பிடித்தனர். தொடர்ந்து ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பதுக்கி வைத்த இடத்தை காட்ட ஜம்புகேஸ்வரனை அழைத்துச் சென்றனர். இதில் திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா அருகே ஊசி பாலம் பகுதியில் ஆயுதங்களை ஜம்புகேஸ்வரன் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

ஆயுதங்களை பறிமுதல் செய்து அவரை மீண்டும் அழைத்து வரும்பொழுது பறிமுதல் செய்த ஆயுதத்தை எடுத்து உதவி ஆய்வாளர் ராஜகோபாலை ஜம்புகேஸ்வரன் வெட்டியுள்ளார். இதனை அடுத்து ஆய்வாளர் வெற்றிவேல் தற்காப்புக்காக ரவுடி ஜம்புகேஸ்வரனை இடது கால் முட்டியில் சுட்டு பிடித்தார். உடனடியாக இருவரையும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் ஆய்வாளர் வெற்றிவேல் உதவி ஆய்வாளர் ராஜகோபால், சிறப்பு ஆய்வாளர் செந்தில் காவலர் சதீஷ் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளனர்.காயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலரை திருச்சி மாநகர காவல் ஆணையர் நேரில் நலம் விசாரித்தார். காயம் அடைந்த நான்கு காவலர்களும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் காவலர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார். தற்போது கைது செய்யப்பட்ட ஜம்புகேஸ்வரன் மீது 15 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஒ விசாரணை நடைபெறும் என தெரிவித்தார். ரவுடி சுடப்பட்ட சம்பவம் திருச்சி மாநகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது