தண்ணீர்… தண்ணீர்… காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்..!

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தோலம்பாளையம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குடிநீருக்காக ஊராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து நேற்று தோலம் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் பெண்கள் காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்..பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . சம்பவ இடத்திற்கு வந்த தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் .ஆனால் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் வரவேண்டும் என்று கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சாலை மறியலால் தோலம்பாளையம் முதல் காரமடை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த ஏ. கே. செல்வராஜ் எம். எல் .ஏ. தண்ணீர் எடுக்கப்படும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் பொது மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.