கோவை கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடு, விடுதிகளில், போதை பொருட்கள், ஆயுதங்கள் உள்ளதா..? துணை கமிஷனர் தலைமையில் 200 போலீசார் சோதனை.!!

கோவையில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. இதில் பயிலும் மாணவர்கள் சிலர், கல்லூரி வெளியே விடுதிகளில், வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வருகிறார்கள். இவர்களிடையே போதை பொருட்கள் பயன்படுத்துவதுவதாகவும், போதையில் ஆயுதங்களால் கல்லூரி மாணவர்கள் தாக்கி கொள்ளுவதாகவும் புகார் எழுந்ததை தொடர்ந்து, தனியாக அறைகள் எடுத்து தங்கி இருக்கும் இடங்களில் போலீசார் காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி, பீளமேடு,குனியமுத்தூர்,ஈச்சனாரி சுந்தராபுரம், மதுக்கரை ஆகிய பகுதிகளில் பல கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ள கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் தங்கி உள்ளனர். ஒரு சில மாணவர்கள் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத காரணத்தால் ,இரவு நேரங்களில் நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு வருவது, போதைப்பொருள் பயன்படுத்துவது, இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்குவது உள்ளிட்ட சம்பவங்கள் ஈடுபடுவதாக குடியிருப்பு பகுதி வாசிகள் தொடர்ச்சியாக காவல்துறைக்கு புகார் தெரிவித்து வந்தனர். கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் புறநகர் பகுதியில் ஒன்று கூடும் கல்லூரி மாணவர்கள், குழுவாக சண்டையிட்டுக் கொள்வதும், கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் சண்டை இட்டுக் கொள்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தன. இதனை தொடர்ந்து இன்று கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில், காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை சந்தேகத்திற்கு இடமான ஆயுதங்களோ, போதை பொருள்களோ சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் பிற்பகல் வரை தொடர்ச்சியாக இந்த சோதனை நடைபெறும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இச்சோதனை இனி இது போன்று அடிக்கடி தொடரும் என்றும் இதில் சிக்கும் நபர்கள் தண்டிக்க படுவார்கள் என மாநகர வடக்கு துணை கமிஷனர் ஸ்டாலின் தெரிவித்தார். இந்த அதிரடி சோதனையால் பல இடங்களில் பரபரப்பாக காணப்பட்டது..