ஆனந்த் அம்பானி – உத்தவ் தாக்கரே திடீர் சந்திப்பு..!

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, திடீரென மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.

இருவரும் இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின் போது இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. அம்பானி குடும்பத்திற்கும், உத்தவ் தாக்கரே குடும்பத்திற்கும் இடையே சுமூக உறவு இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் உத்தவ் தாக்கரே தனது குடும்பத்தோடு கலந்து கொண்டு சிறப்பித்தார். அதேசமயம் இத்திருமணத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டதை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து இருந்தார். காங்கிரஸ் கட்சியும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவும் மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சிகளாக இருக்கின்றன.

மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் உத்தவ் தாக்கரேயை ஆனந்த் அம்பானி சந்தித்து பேசி இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்த் அம்பானிக்கு பெட்ரோலிய பிரிவை பிரித்து கொடுத்து இருக்கிறார். இதையடுத்து குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இருக்கும் பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தையொட்டி இருக்கும் 600 ஏக்கர் நிலத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கான முகாம் ஒன்றை அமைத்திருக்கிறார். இதற்கு வந்தாரா என்று பெயரிட்டு இருக்கிறார். இந்த முகாமில் ஏராளமான யானைகள் போன்ற விலங்குகள் பராமரிகப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.