பாஸ்போர்ட் சேவா இணையதளம் முடக்கம் : 4 நாட்களுக்கு இயங்காது – வெளியான முக்கிய அறிவிப்பு..!

சென்னை: பாஸ்போர்ட் சேவை இணையதளம் நேற்று இரவு 8 மணி முதல் இயங்கவில்லை. பாஸ்போர்ட் சேவை இணையதளம் வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 7) காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி நடைபெறுவதால் சேவை முடங்கியுள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் கீழ், நாடு முழுவதும் பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க அல்லது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க, நாடு முழுவதும் உள்ள மையங்களில் அப்பாயின்மெண்ட்டை பதிவு செய்ய பாஸ்போர்ட் சேவா போர்ட்டல் passportindia.gov.in பயன்படுத்தப்படுகிறது.

பாஸ்போர்ட் சேவா இணையதளத்தில் பதிவு செய்து அப்பாயின்மெண்ட் பெற்றுள்ள நாளில் விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் சேவை மையங்களுக்குச் சென்று ஆவணங்களை வழங்கவேண்டும். இந்த முறை கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் சேவா இணையதள சேவையானது வரும் திங்கட்கிழமை காலை வரை பயன்பாட்டில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதியான நேற்று இரவு 8 மணி முதல் பாஸ்போர்ட் சேவை இயங்கவில்லை. வரும் அக்டோபர் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை பாஸ்போர்ட் சேவா இணையதள சேவை பயன்பாட்டில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், பாஸ்போர்ட் சேவா இணையதளத்தை பயன்படுத்த முடியாது. எனவே, சந்தேகங்களுக்கு, பராமரிப்புப் பணி முடிந்த பிறகு அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட தேதிகளில் பாஸ்போர்ட் சேவா இணையதள பயன்பாட்டை, குடிமக்கள் மட்டுமல்லாமல் வெளியுறவு விவகார அதிகாரிகள், பாஸ்போர்ட் பணியக அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் பயன்படுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பாஸ்போர்ட் சேவா இணையதள சேவைகள் தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக ஆகஸ்ட் 29 ஆம் தேதி இரவு 8 மணி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 6 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நாட்களில் அப்பாய்ன்மென்ட் பெற்றவர்களுக்கு வேறொரு தேதி வழங்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.