ஆம்பூரில் அக்.8ம் தேதி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்..!

திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை, மாதனூர் வட்டார வள மையம் சார்பில், பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், ஆம்பூர் ஐஇஎல்சி செவித்திறன் குறையுடையோருக்கான (காது கேளாதோர் சிறப்பு பள்ளி) மேனிலைப் பள்ளி வளாகத்தில் வருகிற 8ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணிக்கு துவங்குகிறது. இம்முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கண், காது, மூக்கு தொண்டை, எலும்பு முறிவு, மனநலம், குழந்தை நல மருத்துவர்கள் பரிசோதனை செய்து, தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். பழைய அடையாள அட்டை புதுப்பித்து வழங்கப்படும். மாதாந்திர பராமரிப்பு மற்றும் கல்வி உதவித் தொகைக்காக பதிவு செய்யப்படும். ரயில் மற்றும் போக்குவரத்து பயண சலுகை சான்றிதழ் வழங்கப்படும். உதவி உபகரணங்கள் இலவசமாகவும், இலவச அறுவை சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்யப்படும். முகாமிற்கு வரும் போது, மாற்றுத்திறன் உடைய மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகளின் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றின் தலா இரண்டு நகல்கள், பிறப்பு சான்றிதழ் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஐந்து ஆகியவற்றை அவசியம் எடுத்து வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.