மெரீனாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு த.வெ.க. தலைவர் விஜய் இரங்கல்..

மெரீனாவில் விமானப் படை சாகச நிகழ்ச்சியின்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

‘சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியின்போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு விழாவையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி நேற்று(அக்.6) நடைபெற்றது.

மெரீனாவில் 21 ஆண்டுகளுக்குப் பின்னா் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றதாலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் லட்சக்கணக்கான மக்கள் கூடினர். இதனால் நேற்று பேருந்துகளில், ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. மெரீனா பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டது.

இதனிடையே, சாகச நிகழ்ச்சியைப் பாா்வையிட வந்தவா்களில் ஐந்து போ் உயிரிழந்தனா். அதிக வெப்பம் காரணமாக நெரிசலில் சிக்கி 240-க்கும் மேற்பட்டோா் மயங்கி விழுந்தனா். அவா்களில் 93 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமான சாகச நிகழ்ச்சியில் போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.